‘நாட்டை மட்டுமல்ல உலகத்தையே வணிகர்கள் தூக்கிப்பிடிப்பார்கள்’ கமல்ஹாசன் பேச்சு


‘நாட்டை மட்டுமல்ல உலகத்தையே வணிகர்கள் தூக்கிப்பிடிப்பார்கள்’ கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 5 May 2018 10:46 PM GMT (Updated: 5 May 2018 10:46 PM GMT)

நாட்டை மட்டுமல்ல உலகத்தையே வணிகர்கள் தூக்கிப்பிடிப்பார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னையை அடுத்த வேலப்பன்சாவடியில் நடந்த வணிகர்தின மாநாட்டில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-

வணிகர்கள் நலன் பாதுகாக்கப்பட்ட பின்னர் தான் ஜி.எஸ்.டி.-க்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம்.

ஜி.எஸ்.டி. கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று (நேற்று முன்தினம்) நடந்தது. அப்போது 58 பொருட்கள் மீது வரியை குறைத்து ஆகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் மூலம் ஏ.எம். விக்கிரமராஜா முன்மொழிந்ததன் அடிப்படையில் பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பென்ஜமின்

ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் பேசியதாவது:-

கடந்த மார்ச் மாத கணக்கின்படி வணிகர் நல வாரியத்தில் 46 ஆயிரத்து 868 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்களும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கல்வி உதவி, மருத்துவ உதவி, குடும்ப நல உதவி, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி போன்ற பல்வேறு நிதி உதவி வழங்கப்பட்டு வணிகர்கள் பயன் அடைந்து வருவதை மகிழ்ச்சியோடு குறிப்பிட விரும்புகிறேன். வணிகர்கள் தமிழக அரசுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் கமல்ஹாசன்

மாநாட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

கட்சி தலைவராக வந்திருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நானும் ஒரு சிறு வணிகனாகவே இங்கு வந்துள்ளேன். கைக்கெட்டியது வாய்க்கு எட்டாதது தான் எங்கள்(நடிகர்கள்) நிலைமையும். தமிழகம், கர்நாடகா, மராட்டியம் இந்த 3 மாநிலங்களும் தான் ஒழுங்காக வரி செலுத்தும் மாநிலங்கள். நாம் கல்தோன்றி, மண்தோன்றா மூத்தக்குடி மக்கள்.

நாம் தான் வடமாநிலத்தவர்களை விட மூத்தவர்கள். தம்பிமார்களுக்கு இல்லை என்றால், நாம் தான் கொடுக்க வேண்டும். ஆனால் நமக்கே இல்லாத போது, எப்படி கொடுப்பது?. நாங்கள் ஆரம்பித்து இருக்கும் ‘மய்யம் விசில்’ ஆப்பை நீங்களும் பயன்படுத்தலாம். கட்சிக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றாலும், உங்கள் அருகில் இருக்கும் என்னுடைய கட்சிக்காரர்களை பயன்படுத்தி அந்த ஆப்பை பயன்படுத்தலாம்.

சரியாக பயன்படுத்தவில்லை

கிராமசபை கூட்டம் என்பது புதிதாக தோன்றியதல்ல. நமது சட்ட அமைப்பின் 243-வது பிரிவில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக சரியாக பயன்படுத்தவில்லை.

பாராளுமன்றத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் சக்தி படைத்தது கிராம சபைக்கூட்டம். கோர்ட்டு தீர்ப்புகள் பெரும்பாலும் கிராம சபைக்கூட்டத்துக்கே முக்கியத்துவம் அளிக்கும். எனவே நீங்கள் தயவு செய்து மாநாட்டில் கலந்து கொள்வது போல, கிராம சபைக்கூட்டங்களிலும் கலந்து கொள்ள வேண்டும்.

கிராம சபை கூட்டங்கள் ஜனவரி 31, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 ஆகிய 4 நாட்கள் நடைபெறும். இந்த 4 நாட்களையும் தயவு செய்து தமிழகத்துக்காக ஒதுக்கியே ஆக வேண்டும். கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் உங்கள் வணிகமும் மேம்படும் என்பது உறுதி.

தூக்கிப்பிடிப்பார்கள்

உங்கள் தீர்மானத்தில் தேவையில்லாமல் கடையடைப்பு செய்யமாட்டோம் என்று கூறி இருப்பதை பாராட்டுகிறேன். அதற்காக தனிவிழாவே எடுக்கலாம். மக்கள் நீதி மய்யத்தின் அழுத்தமான கொள்கைகளின் ஒன்றும், பெரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்பது தான்.

தமிழக அரசியல் இழந்த மாண்பை மீட்டெடுப்பதற்காக வந்திருக்கிறோம். அதற்காக மக்கள் நீதி மய்யம் சில திட்டங்கள் வகுத்து வருகிறது. அதற்கு நீங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். எல்லாவற்றையும் அரசு தான் செய்ய வேண்டும் என்று இல்லாமல், நாமே சிலவிஷயங்களுக்கு குரல் கொடுத்து, குரல் கொடுக்காமல், அழுத்தம் கொடுத்து, மேஜை தட்டி வாங்க முடியும்.

பல வியாபாரங்களை துலங்க வைத்த கைகள் இங்கு இருக்கின்றன. இந்த கைகளுடன் கை கொடுப்பதிலும், ஆசி பெறுவதிலும் நான் பெருமைப்படுகிறேன். என்னுடைய பார்வையில் கார்ப்பரேட் கம்பெனிகள் எல்லாம், பழையன ஆகிவிடும். சிறுவணிகர்கள் தான் நாட்டை மட்டுமல்ல உலகத்தையே தூக்கிப்பிடிப்பார்கள்.

நாயகர்கள்

இன்று தேய்ந்து கொண்டிருக்கிறது என்று வருத்தப்படும் நீங்கள் தான், நாளைய நாயகர்கள். அதற்கான கட்டமைப்பை, சட்டங்களை நீங்களே அமைத்து கொள்ளவேண்டும்.

இதுபோன்ற குடும்பங்களில் தான் நாங்கள் உறவு வைத்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். நாம் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story