ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? அடுத்த மாதம் அறிக்கை தாக்கல் செய்ய தயாராகி வரும் ஆணையம்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை 44 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது.
சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை 44 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து அடுத்த மாதம் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் தயாராகி வருகிறது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டதை தொடர்ந்து அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆணையம் 3 மாதத்துக்குள் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதியோடு 3 மாத அவகாசம் முடிவடைந்த போது, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருந்ததால் மேலும் 6 மாதம் கால அவகாசம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த கால அவகாசம் அடுத்த மாதம்(ஜூன்) 24-ந் தேதி முடிவடைகிறது.
125-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள்
ஆணையத்தில் 125-க்கும் மேற்பட்டவர்கள் பிரமாண பத்திரம் மற்றும் புகார் மனுக்கள் அளித்து இருந்த போதிலும் அவர்களில் 7 பேருக்கு மட்டுமே ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளது.
ஆணையத்தில் பிரமாண பத்திரம் மற்றும் புகார் மனுக்கள் அளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் வந்த செய்திகள் அடிப்படையிலும், யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையிலும், யூகத்தின் அடிப்படையிலும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தனர். இதனால், அவர்களிடம் விசாரணை நடத்தி எந்த பிரயோஜனமும் இல்லை என்று கருதிய ஆணையம், அவர்களில் ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, அவரது கணவர் மாதவன் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர்கள் என 7 பேரிடம் மட்டுமே விசாரணையை மேற்கொண்டது.
சாதகமான பதில் கிடைக்கவில்லை
இதைதவிர்த்து யார், யாரிடம் விசாரணை மேற்கொண்டால் உண்மை தெரியவரும் என்று ஆணையம் கருதியதோ அவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது அவரது சிகிச்சையை மேற்பார்வையிட அரசு தரப்பில் அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழு, ஜெயலலிதாவின் உதவியாளர்கள், போயஸ் கார்டனில் வேலை பார்த்து வந்த பணியாளர்கள், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது அவரிடம் செயலாளர்களாக பணியாற்றியவர்கள், சசிகலாவின் உறவினர்கள் என 37 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளது. இதுதவிர சசிகலாவின் வாக்குமூலத்தையும் ஆணையம் பெற்றுள்ளது.
37 பேரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜெயலலிதாவின் மரணத்தில் நடந்தது என்ன? என்பதற்கான மர்ம முடிச்சுகள் அவிழ்வதற்கான முக்கிய ஆதாரம் எதுவும் ஆணையத்துக்கு கிடைத்ததாக தெரியவில்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் சாதகமான பதில் எதுவும் இவர்களிடம் இருந்து ஆணையத்துக்கு கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதால் அந்த அடிப்படையில் இன்னும் தீவிரமாக விசாரணையை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்துள்ளது.
விசாரணை இறுதிக்கட்டம்
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது தேர்தல் ஆணைய படிவத்தில் வைக்கப்பட்ட அவரது கைரேகை உயிரோடு இருக்கும்போது வைக்கப்பட்டது அல்ல என்று மருத்துவர் சரவணன் கூறி உள்ள குற்றச்சாட்டை உறுதி செய்ய ஜெயலலிதாவின் கைரேகை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த முடிவுக்காகவும் ஆணையம் காத்திருக்கிறது.
இதுபோன்ற சூழ்நிலையில் ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதாவது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களை மட்டுமே விசாரிக்க வேண்டியது உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இவர்களிடம் விசாரணையை முடித்து அடுத்த மாதம்(ஜூன்) 24-ந் தேதிக்குள் அரசுக்கு அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஆணையம் தனது பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story