உள்ளாட்சி தேர்தல் வந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு


உள்ளாட்சி தேர்தல் வந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு
x
தினத்தந்தி 8 May 2018 4:45 AM IST (Updated: 8 May 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல் வந்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, 

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அவைத்தலைவர் இ.மதுசூதனன் முன்னிலை வகித்தார். மாலை 5.15 மணிக்கு கூட்டம் தொடங்கியது. மாலை 6.15 மணி வரை ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கூட்டத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் முடிந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் வந்தால், அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. எனவே அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும்.

ஜெயலலிதா கட்சி பத்திரிகை தொடங்கிய போது அதை அனைத்து தொண்டர்கள் கையிலும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தார். அதேபோன்று தற்போது தொடங்கப்பட்டுள்ள கட்சி பத்திரிகைக்கு தீவிரமாக சந்தா பிடிக்க வேண்டும் போன்ற கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள சாதனைகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் கொண்டு செல்வதற்கு அதிகளவில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

11 மாவட்டங்களில் கட்சி பத்திரிகைக்கு 41 ஆயிரத்து 810 பேரிடம் பெறப்பட்ட ரூ.6 கோடியே 18 லட்சத்து 15 ஆயிரம் சந்தா தொகை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story