மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லும்போது முன் அனுமதி பெறவேண்டும் மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் சுற்றறிக்கை


மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லும்போது முன் அனுமதி பெறவேண்டும் மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 9 May 2018 3:30 AM IST (Updated: 9 May 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லும்போது முன்அனுமதி பெறவேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் கூறியுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பள்ளி மாணவ-மாணவிகளை சுற்றுலா அழைத்துச்செல்வது தொடர்பாக ஏற்கனவே விரிவான அறிவுரைகள் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், பள்ளி நிர்வாகங்கள் அதனை பின்பற்றாமல் உரிய அனுமதியின்றி பள்ளி மாணவ-மாணவிகளை சுற்றுலா அழைத்துச்செல்வதால், செல்லும் இடங்களில் கவனக்குறைவினால் விலைமதிப்பில்லாத குழந்தைகளின் உயிரிழப்பு ஏற்படுவதும் நடைபெறுகிறது. இவ்வாறான செயல்களுக்கு பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரே முழு பொறுப்பாவார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களை எவ்வித முன்அனுமதியும் பெறாமல் புனேவிலுள்ள முல்சி அணைக்கு அழைத்துச் சென்றபோது அதில் துரதிர்ஷ்டவசமாக 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது மிகவும் வருத்தமளிக்கும் நிகழ்வாகும். இதற்கு பள்ளி நிர்வாகமே காரணம். இதுபோன்ற நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் ஏற்படாத வண்ணம் கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலாவின் காலஅளவு எக்காரணம் கொண்டும் 4 நாட்களுக்கு மிகக்கூடாது. பருவநிலை, வானிலை அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு சுற்றுலாவிற்கான இடம் தேர்வு செய்யப்பட வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள நாள், இடம் மற்றும் வாகனம் முடிவு செய்யப்பட்டவுடன் அதுகுறித்து சுற்றுலாவிற்கு வரும் அனைத்து குழந்தைகளின் பெற்றோரிடமும் எழுத்துமூலம் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

சுற்றுலா செல்லவுள்ள இடம் குறித்து மாணவ-மாணவியருக்கு எடுத்துக்கூறி அந்த இடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்பு எடுக்க வேண்டும். சுற்றுலா செல்லவுள்ள இடத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படின் அதை ஒவ்வொரு மாணவரும் எடுத்துச்செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் உடன் செல்ல வேண்டும். ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவி மற்றும் கடல் போன்ற நீர்நிலை பகுதிகளுக்கு செல்லக்கூடாது. சுற்றுலா செல்லும் பேருந்து முறையாக தரச்சான்று பெற்ற வாகனமா, போதிய அனுபவமுள்ள ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணத்தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

மாணவர்கள் சுற்றுலா செல்லும்போது பாதுகாப்புக்காக எங்களிடம் (மெட்ரிகுலேஷன் இயக்குனரகம்) முன் அனுமதி பெறவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story