என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு இதுவரை 32 ஆயிரம் பேர் விண்ணப்பம் மாணவர் சேர்க்கை செயலாளர் தகவல்
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு 32 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர் என்று என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என்று மொத்தம் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் பி.இ. படிப்புகளுக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த வருடம் முதன்முதலாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இதற்காக கடந்த 3-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள்.
உதவி மையங்கள்
மாணவர்கள் www.annauniv.edu/tnea2018 எனும் இணையதள முகவரியை பயன்படுத்தி எந்த பகுதியிலும் இருந்தும் ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள். இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டு உள்ள 42 உதவி மையங்களுக்கு சென்று இலவசமாக விண்ணப்பித்து வருகிறார்கள். இதுவரை 32 ஆயிரம் பேர் விண்ணப்பத்து உள்ளனர்.
இது குறித்து என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில், விண்ணப்பிக்கும்போது இ.மெயில் முகவரி தேவை. எனவே இ.மெயில் உருவாக்க தெரியாத மாணவ- மாணவிகளுக்கு மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களில் உள்ளவர்கள் இ.மெயில் உருவாக்கி கொடுக்கிறார்கள். அதற்காக கூடுதல் ஆட்கள் உள்ளனர். எனவே இ.மெயில் உருவாக்க தெரியாதவர்கள் உதவி மையங்களுக்கு செல்லுங்கள் என்று தெரிவித்தார்.
30-ந்தேதி கடைசி நாள்
என்ஜினீயரிங் சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.
Related Tags :
Next Story