குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ நிறுவனங்களுக்கு விருது


குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ நிறுவனங்களுக்கு விருது
x
தினத்தந்தி 9 May 2018 3:15 AM IST (Updated: 9 May 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப நலத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விருது வழங்கி கவுரவித்தார்.

சென்னை,

குடும்ப நலத்துறையில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றிய 241 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது.

குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

விழாவில் அவர் பேசியதாவது:-

குடும்ப நலத்திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் அரசு துணை சுகாதார மையங்கள் முதல் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் வரை தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்து 882 மருத்துவ மையங்களில் குடும்ப நல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குடும்ப கட்டுப்பாடு முகாம்கள்

கடந்த 7 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை 21.16 லட்சமாகும். கருத்தடை வளையங்கள் (காப்பர் டி) பொருத்திக்கொண்ட தாய்மார்களின் எண்ணிக்கை 26.17 லட்சம். இதன் மூலம் இதுவரை சுமார் 3 கோடி பிறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோக்சி புரொஜெஸ்ட்ரோன் அசிடேட் என்ற புதிய கருத்தடை ஊசி போடும் முறையினால் இதுவரை 3 ஆயிரத்து 78 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர். மேலும், புதிய தற்காலிக கருத்தடை மாத்திரைகளான சென்ட்ரோமன் (சாயா) மூலம் இதுவரை 4 ஆயிரத்து 446 பெண்கள் பயனடைந்துள்ளனர்.

உயர் பிறப்பு விகிதம் (எச்.ஒ.பி.) அதிகமுள்ள 21 மாவட்டங்களில் 120 வட்டாரங்களில் சிறப்பு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் மூலம் 3 ஆயிரத்து 121 தாய்மார்கள் பயனடைந்து உள்ளனர். இதன் மூலமாக சுமார் 30 சதவீத பேறுகால மரணங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 78.1 சதவீத தாய்மார்கள் 2 குழந்தைகளுக்கு பிறகு குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய சுகாதார குழும இயக்குனர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ராஜாராமன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். 

Next Story