காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 130 தமிழர்களை பாதுகாப்பாக அழைத்துவர தமிழக அரசு ஏற்பாடு


காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 130 தமிழர்களை பாதுகாப்பாக அழைத்துவர தமிழக அரசு ஏற்பாடு
x
தினத்தந்தி 9 May 2018 4:45 AM IST (Updated: 9 May 2018 3:26 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 130 தமிழர்களை பாதுகாப்பாக சென்னை அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா சென்ற பஸ் மீது போராட்டக்காரர்கள் கற்கள் வீசியதில், அந்த பஸ்சில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணிசெல்வம் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயர சம்பவத்தில் உயிர் இழந்த திருமணிசெல்வத்தின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த துயர செய்தியை அறிந்தவுடன், உயிர் இழந்த திருமணிசெல்வத்தின் உடலை சென்னை கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அதன்பேரில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உயர் அதிகாரிகள் இறந்தவரின் உடலை சென்னை கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசின் உதவியுடன் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சுமார் 130 பேர் சுற்றுலா சென்றுள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக சென்னை திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப தேவையான உதவிகளை பெற டெல்லி தமிழ்நாடு இல்ல அதிகாரிகளின் தொலைபேசி எண் 01124193450, 01124193100 மற்றும் 01124193200 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா முப்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.

வருங்காலங்களில் தமிழ்நாட்டில் இருந்து பிற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தங்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொண்டு, தங்கள் பயணத்தை திட்டமிட வேண்டும்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்த திருமணிசெல்வம், இறந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாயை அவரது குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story