நதிகளை இணைப்பதே என் கனவு தமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் வரும் என்றும் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் இறங்குவதாக அறிவித்த நாளில் இருந்து அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. #Rajinikanth #Kaala
சென்னை,
அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பு ரஜினி மக்கள் மன்றத்தை வலுப்படுத்தும் பணியில் இறங்கிய ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் தன்னுடைய மன்றங்களுக்கு 8 ஆயிரம் புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டார்.
கட்சி ஆரம்பிப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடித்து உள்ள ரஜினிகாந்த், கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்று தற்போது அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியிட்டு விழா பொது இடத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் சுமார் 10 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. நிர்வாகிகளை நியமித்த பிறகு அவர்கள் அனைவரையும் ரஜினிகாந்த் ஒரே இடத்தில் சந்திக்கும் நிகழ்வு என்பதால் இந்த இசை வெளியிட்டு விழா மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இசை வெளியிட்டு விழாவில் ரஜினிகாந்த் கட்சியின் பெயர் அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியதால், ரஜினிகாந்த் ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் ஆர்வலர்கள் இந்த விழாவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இரவு 7.30 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மையதானத்தில் ‘காலா’ இசை வெளியிட்டு விழா தொடங்கியது.
அண்ணாசாலையில் இருந்து விழா அரங்கம் வரை ரஜினிகாந்தை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. மாலை 5.30 மணியளவில் இருந்தே ரசிகர்கள் கூட்டத்தால் விழா நடந்த மைதானம் நிரம்பி வழிந்தது. எங்கு பார்த்தாலும் ரஜினிகாந்தை வாழ்த்தி ரசிகர்கள் கோஷமிட்டப்படி இருந்தனர்.
விழாவில் பங்கேற்பதற்காக 7.10 மணிக்கு ரஜினிகாந்த் அரங்கத்திற்கு வந்தார். அப்போது ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். ரஜினிகாந்த் கருப்பு சட்டை, பேண்ட் அணிந்திருந்தார். விழா மேடையில் காலா படத்தில் இடம் பெற்றிருந்த ஜீப் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விழாவில் காலா படத்தின் டீசர் திரையிடப்பட்டது. காலாவின் பாடல்களுக்கு கலைஞர்கள் நடனம் ஆடினர். காலா தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் பா.ரஞ்சித், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் காலா படம் குறித்து பேசினர்.
இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இது ஆடியோ வெளியீட்டு விழா போலவே தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா போல இருக்கு. இது படத்தின் வெற்றி விழா தான். சிவாஜி பட வெற்றி விழாவில் தான் கடைசியாக நான் பங்கேற்றேன். அதன் பிறகு எந்திரன் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அந்த வெற்றி விழா கொண்டாட நினைக்கும்போது எனக்கு உடல் நலம் சரியில்லை. சிங்கப்பூர் சென்றேன். உங்களின் வேண்டுதலால் நான் மீண்டு வந்தேன். கால தாமதம் ஆகி விட்டது. அந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட முடியவில்லை.
நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, சிலர் குணமாக வேண்டும் என்றால், மனதை கட்டுப்படுத்த வேண்டும் என்றனர். உடலும், மனதும் நன்றாக இருக்க வேண்டும். உடல் கெட்டு போனால் மனசு கெட்டு போய் விடும். உங்களுக்கு பிடித்தமான வேலையை செய்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். நமக்கு நடிப்பை தவிர வேறு வேலை தெரியாது. ராணா படம் பண்ணும்போது உடல் நலம் சரியில்லை. கொஞ்சம் மாற்றி, அனிமேஷன் படம் பண்ணலாம் என்று நினைத்தேன். என்னுடைய மகள் சவுந்தர்யா அனிமேஷனில் நிபுணத்துவம் பெற்றவர். அந்த படத்தில் 7, 8 நாட்கள் நடித்தால் போதும் என்றார்கள். சரி என்றேன்.
ஆனால் மேலும் பணம் செலவாகும் என்று சொன்னார்கள். ஏனென்றால் அவர்கள் எல்லாம் அதி புத்திசாலிகள். செலவு அதிகம் ஆகும் என்பதால் இத்துடன் படத்தை நிறுத்திக்கொள்ளலாம் என்றேன். அந்த படம் சரியாக போகவில்லை. அதில் இருந்து ஒன்றை தெரிந்துகொண்டேன்.
புத்திசாலிகளுடன் பழக வேண்டும், ஆலோசனை செய்யலாம், ஆனால் அதி புத்திசாலியுடன் பழக கூடாது. அவர்கள் பல திட்டங்கள், யோசனை வைத்திருப்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் பல ஜன்னல்கள் இருக்கும், பல கதவுகள் இருக்கும். எல்லாம் மூடி இருக்கும். நேரம் வரும்போது எந்த ஜன்னல் என்றும், எந்த கதவு என்றும் தெரியாமல் ஓடி போய் விடுவார்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நேரம் வரும் போது கதவுகள் தானாக திறக்கும்.
அதன்பிறகு கே.எஸ்.ரவிக்குமாரை கூப்பிட்டு ஒரு படம் பண்ணலாம் என்றேன். லிங்கா கதை பிடித்து இருந்தது. தண்ணீர் பஞ்சம், நதி என்று சொன்னாலே என்னையே அறியாமல் அதில் எனக்கு ஈடுபாடு வந்து விட்டது. இமயமலைக்கு நான் போகிறதே கங்கையை பார்க்கிறதுக்கு தான், சில இடங்களில் ஆர்ப்பரிப்புடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும், சில இடங்களில் மவுனமாக செல்லும்.
நதிகள் இணைப்பு என் வாழ்க்கையில் இணைந்த ஒன்று. என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பது தான். அடுத்தநாளே கண்ணை மூடினாலும் பரவாயில்லை.
லிங்கா கதாபாத்திரம் அருமையானது. இந்த படம் நெனச்ச அளவுக்கு போகவில்லை. அந்த படத்தில் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். நல்லவனாக இருக்கனும், ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது. ரொம்ப நல்லவனாக இருந்தால் ஆபத்து, கோழைன்னு நினைத்து விடுவார்கள். லிங்கா ஓடவில்லை. ரஜினி கதை முடிஞ்சு போச்சு. இதை தான் 40 வருஷமாக சொல்லிக்கிட்டு இருக்காங்க. என்னடா இந்த குதிரை ஓடிக்கிட்டே இருக்கு அப்படின்னு நினைத்தார்கள், 10 வருஷம் பார்த்தாங்க, 20 வருஷம் பார்த்தாங்க, 30 வருஷம் பார்த்தாங்க, 40 வருஷமாக பார்க்கிறாங்க. நானாக ஓடவில்லை. நீங்கள் ஓட வச்சிருக்கீங்க, ஆண்டவன் ஓட வைத்துள்ளான்.
எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. 4 தவளைகள் மலையேறி போகலாம் என்று நினைத்து போக தொடங்கியது. அப்போது எல்லாரும் அந்த பாதையில் செல்லாதீர்கள், பாம்பு, தேள் இருக்கும் என்று பயம் காட்டினார்கள். ஆனால் அதில் 3 தவளைகள் போகாமல் நின்று விட்டது. ஒரு தவளை மட்டும் மலையேறியது. ஏனென்றால் அந்த தவளைக்கு காது கேட்காது. அதேபோல தான் யார் என்ன சொன்னாலும் என் பாதையில் போய் கொண்டு இருப்பேன். நாம் வயதுக்கு தகுந்ததாவறு மாற்றம் செய்ய வேண்டும். காலத்திற்கேற்ப மாற்றினோம்.
கபாலி படம் வித்தியாசமாக இருக்கும். நான் இத்தனை வருடம் நடித்ததில் 2 வில்லன்களை பார்த்து இருக்கிறேன். பாட்ஷாவில் ஆண்டனி (ரகுவரன்), படையப்பாவில் நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்). அதன் தொடர்ச்சியாக இப்போது காலாவில் ஹரிதாதா (நானா படேகர்).
இந்த படம் அருமையான படமாக இருக்கும். வெற்றி அடையும். காலா அரசியல் படம் அல்ல, படத்தில் அரசியல் இருக்கு.
தாய், தந்தை நமக்கு தெய்வம். அவர்களின் மனதை நோகடிக்காமல் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் குடும்பம் சின்ன கோட்டை. இது மோசமான உலகம். நம்மை காப்பாற்ற குடும்பத்தை கைப்பிடித்து கொள்ளுங்கள். ஒரு மரம், செடி வளர மண், உரம் போடணும். நாம் வளர யோசனைகள் வைத்து கொள்ள வேண்டும். ஆக்கப்பூர்வமான சிந்தனைக்கு கவனம் கொடுங்க, கெட்ட சிந்தனை வந்தால் இடம் கொடுக்காதீர்கள். ஒவ்வொரு சிந்தனைக்கும் கலர், எடை இருக்கிறது. சந்தோஷமான சிந்தனையை வைத்து கொள்ளுங்கள். தேவையில்லாத சிந்தனைகளை மனதில் வைக்காதீர்கள்.
மீடியா ஆட்கள், நம்முடைய ரசிகர்களும் என்ன மேட்டருக்கு வரவில்லை என்று நினைப்பார்கள். இங்கே வந்திருக்கும் நமது ரசிகர்களும் அப்படி தான் நினைப்பீர்கள். நான் என்ன பண்றது கண்ணா...இன்னும் தேதி வரலை, கடமை இருக்கிறது. நேரம் வரும். நேரம் வரும் போது ஆண்டவன் ஆசீர்வாதத்தினால், மக்கள் ஆதரவினால் தமிழக மக்களுக்கு நல்ல நேரம் பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், பட அதிபர்கள் எஸ்.தாணு, டி.சிவா, தேனப்பன், நடிகைகள் மீனா, கஸ்தூரி, ரஜினிகாந்த் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story