17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி சமோசா வியாபாரி கைது


17 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி சமோசா வியாபாரி கைது
x
தினத்தந்தி 10 May 2018 3:45 AM IST (Updated: 10 May 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

17வயது சிறுமியை சென்னையில் இருந்து திருச்சிக்கு கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சி செய்த சமோசா வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

கைது செய்யப்பட்ட சமோசா வியாபாரியின் பெயர் நாகூர் மீரான் (வயது 57). இவர் சென்னை ஓட்டேரி பிரிக்ளின் சாலை பகுதியில் வசிக்கிறார். இவரது மனைவி நூர்ஜகான் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பதாக தெரிகிறது. நூர்ஜகானை உடன் இருந்து பார்த்துக்கொள்ள 17 வயது சிறுமி வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தார்.

அந்த சிறுமி மீது நாகூர் மீரான் விருப்பப்பட்டு உள்ளார். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டு, ஏமாற்றி அந்த சிறுமியை திருச்சிக்கு கடத்தி சென்றதாக தெரிகிறது. திருச்சி அருகே உள்ள லால்குடியில் தனது உறவினர் வீட்டில் சிறுமியை நாகூர் மீரான் தங்க வைத்துள்ளார். திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார்.

நாகூர் மீரானை திருமணம் செய்து கொள்ள விரும்பாத சிறுமி, நாகூர் மீரான் இல்லாத நேரத்தில் அவரது செல்போனை எடுத்து சென்னையில் உள்ள தனது தந்தைக்கு பேசி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழுதார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தை தலைமைச் செயலக காலனி போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை பொதுமக்கள் உதவியோடு போலீசார் மீட்டனர். நாகூர் மீரானை போலீசார் நேற்று கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் நாகூர் மீரான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகூர் மீரானுக்கு குழந்தைகள் இல்லை. அவர் ஏற்கனவே 4 பேரை திருமணம் செய்தவர் என்றும், 5-வதாக சிறுமியை திருமணம் செய்ய முயற்சித்துள்ளார் என்றும் போலீசார் கூறினார்கள்.

Next Story