போலீஸ் நிலையத்தில் மர்ம மரணம்: பிரேத பரிசோதனை செய்ய டாக்டர்கள் நியமனம் ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்த அரசு ஊழியரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தடய அறிவியல் டாக்டர்கள் இருவரை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை
காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றரசு. அச்சரப்பாக்கம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். சொத்து தகராறு தொடர்பான புகார் மீது விசாரணை நடத்த சிற்றரசுவை கடந்த 1-ந் தேதி சூனாம்பேடு போலீசார் அழைத்துச் சென்றனர்.
மறுநாள் போலீஸ் நிலையத்தில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறினர். ஆனால் சிற்றரசுவை போலீசார் அடித்துக்கொலை செய்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிற்றரசுவின் உடலை, பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்கள் தரப்பு டாக்டர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சிற்றரசுவின் மனைவி வெண்ணிலா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர். அப்போது போலீஸ் தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் எமலியாஸ், மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஆர்.சங்கரசுப்பு, ஏ.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரரின் கணவர் போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தபோது, இறந்துள்ளார். அதனால், பிரேத பரிசோதனை சந்தேகம் வராமல் நடந்தால்தான், அவரது இறப்புக்கு உண்மையான காரணம் தெரியவரும் என்று மனுதாரர் கருதுகிறார்.
அதனால், சிற்றரசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்கள் தரப்பு டாக்டர்களும் உடன் இருக்க வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுக்கிறார். அதுமட்டுமல்ல, சிற்றரசு கடந்த 1-ந் தேதி இறந்துள்ளார். அவரது உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, தடய அறிவியலில் சிறந்த டாக்டர்கள் இருவரை நாங்கள் நியமிக்கிறோம்.
சென்னை மருத்துவ கல்லூரியில், தடய அறிவியல் துறையின் இயக்குனராக உள்ள டாக்டர் பராசக்தி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தடய அறிவியல் துறை பேராசிரியராக இருக்கும் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) சிற்றரசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும். பிரேத பரிசோதனை செய்யும்போது, வீடியோ படம் எடுக்கவேண்டும். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story