‘மருத்துவர் ஆக்கவா? மனநோயாளிகளாய் மாற்றவா?’ ‘நீட்’ தேர்வு குறித்து அ.தி.மு.க. நாளேடு விமர்சனம்
‘நீட்’ தேர்வு மாணவர்களை மருத்துவர் ஆக்கவா? மனநோயாளிகளாய் மாற்றவா? என்று அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேட்டில் கவிதை எழுதப்பட்டுள்ளது.
சென்னை,
‘நீட்’ தேர்வு குளறுபடிக்கு மத்திய அரசின் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தான் காரணம். தமிழக அரசின் நிலைப்பாடு ‘நீட்’ தேர்வு தேவை இல்லை என்பது தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார்.
இந்தநிலையில் ‘நீட்’ தேர்வை விமர்சித்து அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது புரட்சி தலைவி அம்மா’ ஏட்டில் கவிதை எழுதப்பட்டுள்ளது.
அந்த கவிதையில் உள்ள வரிகள் வருமாறு:-
நெல் எடுத்து நீ வரணும். உமி கொண்டு நான் வருவேன். ‘நீட்’ என்னும் தட்டிலிட்டு நீயும் நானும் ஊதி, ஊதிச் சாப்பிடலாம். சாறெடுத்து வரும் உனக்கும் சக்கை கொண்டு வரும் எனக்கும் சம உரிமை. அதுமட்டுமா, ஊதி சாப்பிடும் முன்னாடி உனக்கும் எனக்கும் ஒரு சமத்துவ பரீட்சை இருக்கு. அது நான் படிச்ச பாடத்துல நான் பரீட்சை எழுதுவேன். நீயும் நான் படிச்ச பாடத்துல, நீ படிச்சத விட்டுப்புட்டு ‘நீட்’டா நீ பரீட்சை எழுதணும். அப்படியா?.
கொஞ்சம் அவகாசம் கொடுத்தீங்கனா உங்க பாடம் என்னென்னு ஒரு நிமிஷம் படிச்சுப்பேன்.
வருசக் கணக்கா நான் படிச்ச பாடத்தை வழிச்சு எறிஞ்சுபுட்டு உங்க வழியே கதியுன்னு புடிச்சுப்பேன். அப்படி எல்லாம் முடியாது. தெய்வக் குத்தத்திலும் மேலான உச்சநீதிமன்ற குத்தமாகி போயிடும். உச்சத்தின் தீர்ப்புகளை துச்சமா மிதிப்பதற்கு எங்களுக்கு மட்டும் தான் எப்போது உரிமை உண்டு. புரியுதா?. சரிங்க.
இந்த பரீட்சையை எங்கே எழுதனும்? அதுவா. நாங்கள் எல்லாம் எங்க ஊர்ல எழுதுவோம். நீங்க மட்டும் உங்கள் ஊரைத் தவிர ஒட்டகம் மேயுற ராஜஸ்தான்ல கொஞ்சப் பேரு, சேட்டன்களின் கேரளாவுல கொஞ்சம் பேரு, லாட்டரிக்கு புகழ் வாய்ந்த சிக்கிம்ல கொஞ்சப் பேருன்னு உங்க ஊரை விட்டுப்புட்டு ஊர், ஊரா சீரழிஞ்சு அலையனும். உதவிக்கு அழைச்சுப் போன உங்களோட அப்பாக்கள உசுருல்லாம அனுப்பனும்.
அது சரிங்க. இவ்வளவு நடுவுநிலையோட நாணயமா நடத்துறீங்களே இந்த பரீட்சை. எங்கள மருத்துவர் ஆக்கவா? இல்லை மன நோயாளிகளாய் மாற்றவா?
இவ்வாறு கவிதை இடம் பெற்றுள்ளது.
Related Tags :
Next Story