திருவண்ணாமலை அருகே மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கில் 23 பேர் கைது
திருவண்ணாமலை அருகே குழந்தையை கடத்தியதாக மூதாட்டி கொல்லப்பட்ட வழக்கில் 23 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருவண்ணாமலை,
சென்னையில் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ருக்மணி (வயது 65). இவர் மலேசியாவில் இருந்து வந்திருந்த உறவினர்களான மோகன்குமார் மற்றும் சந்திரசேகரன் ஆகிய இருவரை அழைத்து கொண்டு திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள தங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
இதற்காக கார் ஒன்றில் அவர்கள் புறப்பட்டனர். வெங்கடேசன் என்பவரும் அவர்களுடன் சென்றுள்ளார். காரை கஜேந்திரன் என்பவர் ஓட்டினார்.
அவர்கள் 5 பேரும் ஜவ்வாது மலை அடிவார பகுதிக்கு வந்தபொழுது அங்கு நின்றிருந்த குழந்தை ஒன்றிற்கு இனிப்பு கொடுத்துள்ளனர். ஆனால் அதனை கவனித்த அருகில் இருந்தவர்கள் குழந்தையை கடத்துவதற்காக வந்தவர்கள் என தவறாக நினைத்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் காரில் வந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டனர். ஆனால் அங்கிருந்தவர்கள், குழந்தையை கடத்த வந்தவர்கள் ஊருக்குள் வருகின்றனர் என தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த கிராம மக்கள் திரண்டு வந்து காரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ருக்மணி பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டார். மற்ற 4 பேரும் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவத்தினை அடுத்து அத்திமூர், தம்புகொட்டன்பாறை மற்றும் கலையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 62 பேர் மீது கொலை, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story