மாநில செய்திகள்

“சும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்” ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் + "||" + To Gurumurthy, Minister Jayakumar condemned

“சும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்” ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

“சும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்” ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
“தனது கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது” என்றும், “சும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்”, என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை, 

“தனது கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது” என்றும், “சும்மா இருக்கும் ரஜினிகாந்தை ஊதி கெடுத்துவிட வேண்டாம்”, என்றும் ஆடிட்டர் குருமூர்த்திக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ‘தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பா.ஜ.க.வுடன் சேர்ந்து ரஜினிகாந்த் நிரப்ப முடியும்’ என ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய கணக்கு வேலையை மட்டும் பார்த்தால் நல்லது. ஆடிட்டர் குருமூர்த்தி அரசியல் குருமூர்த்தி ஆகிவிடக்கூடாது. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்பது பழமொழி. பாவம், ரஜினிகாந்த் சும்மா இருக்கிறார். அவரை ஆடிட்டர் குருமூர்த்தி ஊதி கெடுத்துவிட வேண்டாம்.

தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அப்படி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும்போது, வெற்றிடம் எனும் நிலை எப்படி இருக்க முடியும்?

ஆடிட்டர் குருமூர்த்தி நேரடியாக சொன்னாலும் சரி, சூசகமாக சொன்னாலும் சரி தமிழகத்தை பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் ஜெயலலிதா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. தான் ஆட்சி கட்டிலில் அமரும், கோலோச்சும். கருத்துகளை யார் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். ஆனால் மக்கள் தான் தீர்ப்பு வழங்குபவர்கள். கனவிலும், கற்பனை உலகத்திலும் இருப்பவர்களின் கருத்துக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது.

கேள்வி:- காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டின் 600 பக்க தீர்ப்பை யாரும் படிக்காமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல என்று குருமூர்த்தி கூறியிருக்கிறாரே?

பதில்:- ஆளும் அரசே போராடுகிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு என் நன்றி. மாநில உரிமைக்காக அ.தி.மு.க. அரசு என்றைக்குமே போராடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என உள்ளங்கை நெல்லிக்கனி போல தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. எனவே தான் மத்திய அரசுக்கு எல்லா விதத்திலும் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி:- குழந்தை திருட்டு என கருதி கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் சென்னை பெண்மணி இறந்திருக்கிறாரே?

பதில்:- ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிட கூடாது என்பது தான் சட்டத்தின் மாண்பு. பாலியல் தொல்லைகள் உள்பட குழந்தைகள் மீதான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதே மக்கள் மற்றும் அரசின் கடமையாகும். எனவே பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுத்து இதுபோல செயல்களில் ஈடுபடக்கூடாது. யார் மீதாவது சந்தேகம் இருந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்கலாம். நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.