காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன ஜி.கே.வாசன்


காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன ஜி.கே.வாசன்
x
தினத்தந்தி 11 May 2018 4:30 AM IST (Updated: 11 May 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் துரோகம் செய்கின்றன என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வர்த்தகர் அணி சார்பில் வணிகர் தினவிழாவையொட்டி சாதனையாளர்கள் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார்.

வர்த்தகர் அணி மாநில தலைவர் ஆர்.எஸ்.முத்து முன்னிலை வகித்தார். மூத்த துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், துணைத்தலைவர் கோவைதங்கம், தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில இணைச்செயலாளர் மால்மருகன், இளைஞரணி மாவட்ட தலைவர் ஜெயம் ஜெ.கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கிய நடிகர் ரமேஷ்கண்ணா(கலைத்துறை), கே.ராஜா(வணிகத்துறை), தேவானந்த்(கல்வித்துறை), கே.கே.பில்டர்ஸ் (கட்டிடத்துறை), சங்கர்ராஜ்(உணவுத்துறை), டாக்டர் காமராஜ்(மருத்துவத்துறை) உள்பட 9 பேருக்கு ஜி.கே.வாசன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இதையடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை விமானநிலையம் காமராஜ் உள்நாட்டு முனையம் என்று இருந்ததை, அதில் உள்ள காமராஜ் பெயரை நீக்க இருக்கின்றனர். அதை நீக்கக்கூடாது. காமராஜர் உள்நாட்டு முனையம் என்ற பெயர் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

* தமிழக அரசு வணிக நல வாரியத்தை சீரமைத்து அதில் வணிக பிரதிநிதிகளை வாரிய உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்.

* ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மருந்து பொருட்கள் கூட ஆன்லைனில் விற்கும் நிலை இருக்கிறது. அதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் வழங்கும் என்று ஏங்கிக்கொண்டு இருந்த விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க.வும், கர்நாடக காங்கிரசும் துரோகத்தையும், அநீதியையும் இழைத்து இருக்கின்றன. தொடர்ந்து இந்த 2 கட்சிகளும் தேர்தல் தான் முக்கியம் என்றும், தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என்றும் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த கட்சிகளை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அறிக்கை வழங்க வேண்டும். சட்டத்துக்கு மதிப்பு கொடுத்து கர்நாடக அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்.

த.மா.கா. தனித்தன்மையோடு இயக்கத்தை பலப்படுத்துகிறது. பெரிய கட்சிகளோ, சின்ன கட்சிகளோ இப்போதுள்ள சூழ்நிலையில் கூட்டணி அவசியம். தேர்தல் வரும்போது, த.மா.கா. சார்பில் கூட்டணி குறித்து ஆலோசிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story