மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் 13-ந்தேதி சென்னை வருகை
ஆய்வு பணிகளுக்காக மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் 13-ந்தேதி சென்னை வருகிறார்.
சென்னை,
ஆய்வு பணிகளுக்காக மெட்ரோ ரெயில் பாதுகாப்பு ஆணையர் 13-ந்தேதி சென்னை வருகிறார். நேரு பூங்கா-சென்டிரல் இடையே இம்மாத இறுதியில் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் நேரு பூங்கா-விமானநிலையம், விமானநிலையம்-சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடந்துவருகிறது.
இந்த பாதையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை மெட்ரோ ரெயில் நிறுவனம் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகருக்கு தகவல் தெரிவித்தது. இதனை ஆய்வு செய்ய பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகர் 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் நிறுவன தலைமையிடத்துக்கு வருகிறார்.
அங்கு ஆய்வு நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஆணையர் ஆலோசனை நடத்துகிறார்.
ஷெனாய் நகரில் இருந்து நேரு பூங்கா வரை உள்ள முதல் பாதையில் மட்டும் ரெயில் இயக்கப்படுகிறது. பணிகள் நிறைவடைந்த 2-வது பாதையில் 14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 8 மணி அளவில் பாதுகாப்பு ஆணையர் முதலில் டிராலியில் சென்றும், தொடர்ந்து மெட்ரோ ரெயிலில் சென்றும் ஆய்வு செய்கிறார்.
அடுத்து நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை)-சைதாப்பேட்டை இடையே டிராலியில் சென்றும், தொடர்ந்து மெட்ரோ ரெயிலை வேகமாக இயக்கியும் ஆய்வு செய்கிறார். 15-ந்தேதி மாலை வரை இந்த ஆய்வு பணிகள் நடக்கிறது. சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் அவர் பெங்களூரு புறப்பட்டு செல்கிறார்.
ஓரிரு நாட்களில் ஆய்வு அறிக்கை பெறப்பட்ட பின்னர் இம்மாத இறுதியில் நேரு பூங்கா-சென்டிரல் மற்றும் டி.எம்.எஸ்.-சைதாப்பேட்டை இடையே மெட்ரோ ரெயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த தகவலை மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story