ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் நாளை சந்திக்கிறார்


ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்களை ரஜினிகாந்த் நாளை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 12 May 2018 2:30 AM IST (Updated: 12 May 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, அதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகு, அதற்கான வியூகங்களை தொடர்ந்து வகுத்து வருகிறார். தன்னுடைய ரஜினி நற்பணி மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் ரஜினிகாந்த் நியமித்தார்.

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பு எப்போது? என்பது குறித்து அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ரஜினி மக்கள் மன்றத்தின் கிளை அமைப்புகள் உறுதியானதும், அரசியல் அறிவிப்பு இருக்கும் என்று அதன் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். நேற்று முன்தினம் ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களை சந்தித்த போதும் அதே கருத்தை தான் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞர் அணி செயலாளர்களை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சந்திக்க இருக்கிறார். இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில செயலாளர் ராஜூ மகாலிங்கம் நேற்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அனைத்து ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களை நமது அன்புத்தலைவர் ரஜினிகாந்த் 13-ந் தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் சந்திக்க இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த், இளைஞர் அணி செயலாளர்களை எங்கு சந்திக்கிறார்? என்பது இன்னும் முடிவாகவில்லை.

Next Story