தமிழ்நாடு மாநில போக்குவரத்துக்கழகத்துடன் (மதுரை) திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்தை இணைக்க அரசு ஆணை


தமிழ்நாடு மாநில போக்குவரத்துக்கழகத்துடன் (மதுரை) திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்தை இணைக்க அரசு ஆணை
x
தினத்தந்தி 12 May 2018 3:45 AM IST (Updated: 12 May 2018 2:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக்கழகத்துடன் (மதுரை) திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்தை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக்கழகத்துடன் (மதுரை) திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்தை இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தை (மதுரை) இரண்டு கழகங்களாக, அதாவது மதுரை, திருநெல்வேலி என்று பிரிப்பதற்கான உத்தரவு கடந்த 2010-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்திலும் (மதுரை); திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்திலும் (திருநெல்வேலி) இணைக்கப்பட்டன.

இந்த நிலையில் அரசுக்கு தமிழ்நாடு மாநில போக்கு வரத்துக் கழகத்தின் (திருநெல்வேலி) மேலாண்மை இயக்குனர் கடிதம் எழுதினார். அதில், கழகத்தின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை பற்றி கடந்த மார்ச் மாதம் ஆலோசனை செய்தபோது, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்துடன் (மதுரை) இணைக்கும்படி அரசுக்குக் கடிதம் எழுதலாம் என்று இயக்குனர்கள் குழு அறிவுரை வழங்கியது. எனவே நிதிநிலையை மேலும் மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்துடன் (மதுரை) திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தை இணைப்பதற்கான தகுந்த முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆராய்வதற்கு 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது. அதில், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகத்தின் நிதி நெருக்கடி பற்றியும், அது தனிப்பட்டு இயங்க முடியாது என்பதற்கான பல்வேறு தகவல்களும் கூறப்பட்டு இருந்தன.

மேலும், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்துடன் (மதுரை) திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்தை இணைப்பதற்கான பரிந்துரையையும் அந்தக் குழு அளித்திருந்தது. அதை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்துடன் (மதுரை) திருநெல்வேலி போக்குவரத்துக்கழகத்தை இணைக்க உத்தரவிடப்படுகிறது. இணைப்புக்கான நடைமுறைப் பணிகளை முடிக்க உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story