மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ள காமன் இந்தியா லிமிடெட் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘எங்களது நிறுவனத்தில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களுக்கு தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உரிய பங்களிப்பு தொகையை செலுத்தி வருகிறோம். ஆனால், முறையாக பங்களிப்பு தொகையை செலுத்தவில்லை எனக்கூறி விசாரணைக்கு ஆஜராகும்படி வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் எங்களுக்கு சம்மன் அனுப்பி இருப்பது சரியல்ல. அந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘வருங்கால வைப்பு நிதிக்கான பங்கீட்டுத்தொகையை முறையாக செலுத்தி இருந்தால் சட்டரீதியாக விசாரணையை எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும். அதைவிடுத்து விசாரணைக்கே ஆஜராக முடியாது என்பது சரியல்ல. எனவே, நிறுவன அதிகாரி விசாரணைக்கு ஆஜராக வேண்டும். அவர்களிடம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைப் பின்பற்றி வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் விசாரணை நடத்தலாம்’ என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story