பெற்றோருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு ராணுவ வீரருடன் இளம்பெண் ஓட்டம்
பெற்றோருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டு ராணுவவீரருடன் மகள் ஓடிய சம்பவம் ஆரணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா களம்பூரை அடுத்த முக்குறும்பை கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களது மகள் திவ்யா (வயது 24) பி.ஏ. படித்துள்ளார். இவரும் முக்குறும்பை காலனியை சேர்ந்த குமார் என்பவர் மகன் விஜயராஜும் (25) காதலித்து வந்துள்ளனர். விஜயராஜ் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். மீண்டும் காதல்ஜோடியினர் சந்தித்து பேசினர்.
அப்போது இவர்களது காதலுக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சமைத்த உணவில் மயக்கம் ஏற்படும் வகையில் ஏதோ ஒரு பொருளை கலந்து அந்த உணவை பெற்றோருக்கும் உடன் இருந்த அக்காள் காயத்திரிக்கும் திவ்யா பரிமாறியுள்ளார். சற்றுநேரத்தில் அவர்கள் மயக்கம் அடைந்தவுடன் காதலன் விஜயராஜ் அங்கு வந்தார். பின்னர் திவ்யாவும் அவரும் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து பிச்சாண்டி, அம்பிகா மற்றும் காயத்திரி ஆகியோர் எழுந்தனர். மகள் திவ்யா காணாததை கண்டு விசாரித்தபோது அவர் காதலன் விஜயராஜுடன் ஓடிச்சென்றது தெரியவந்தது. பின்னர் பிச்சாண்டி உள்பட 3 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இது குறித்து அவர்கள் களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் திவ்யா 15 பவுன் நகையுடனும், ரூ.20 ஆயிரத்துடனும் காதலனுடன் சென்று விட்டதாக தெரிவித்திருந்தனர்.
அது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா வழக்குப் பதிவு செய்து மாயமான திவ்யாவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை களம்பூர் காவல் நிலையத்திற்கு மாயமான திவ்யாவை விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் மற்றும் சிலர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அப்போது தனது விருப்பப்படி படவேடு கோவிலில் திருமணம் செய்துகொண்டதாகவும் பெற்றோர்கள் கூறுவதுபோல் நகை, பணம் எடுத்துச் செல்லவில்லை என கூறி தகவலை எழுத்துப்பூர்வமாக எழுதி திவ்யா போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அங்கிருந்து சென்று விட்டார்.
Related Tags :
Next Story