அடுத்தடுத்து பஸ்கள் மோதல்; 20 பேர் காயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


அடுத்தடுத்து பஸ்கள் மோதல்; 20 பேர் காயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 12 May 2018 7:31 PM GMT (Updated: 12 May 2018 7:31 PM GMT)

சிங்கபெருமாள்கோவில் அருகே அடுத்தடுத்து பஸ்கள் மோதிய விபத்தில் 20 பேர் காயம் அடைத்தனர்.

வண்டலூர், 

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் வாரத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்வது வழக்கம்.

அப்படி அனைவரும் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வரை வாரந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் ஊர்ந்து சென்றன.

அப்போது நள்ளிரவு 12½ மணி அளவில் சிங்கபெருமாள்கோவில் அருகே முன்னால் சென்ற லாரியை ஒரு ஆம்னி பஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது பின்னால் வந்த மற்றொரு ஆம்னி பஸ் முன்னால் சென்ற ஆம்னி பஸ் மீது மோதியது.

அப்போது அடுத்தடுத்து பின்னால் வந்த மற்ற 2 ஆம்னி பஸ்களும் முன்னால் சென்ற ஆம்னி பஸ்கள் மீது மோதியது. இதில் மொத்தம் 4 ஆம்னி பஸ்களில் பயணம் செய்த 3 பெண்கள் உள்பட 20 பேர் லேசான காயம் அடைந்தனர்.

உடனே ஆம்னி பஸ்களில் இருந்தவர்கள் அனைவரும் மாற்று பஸ் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடுத்தடுத்து விபத்தில் சிக்கி சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்த ஆம்னி பஸ்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்புகளை சரி செய்தனர்.

அதன் பின்னர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தொடங்கியது. இந்த அடுத்தடுத்த ஆம்னி பஸ்கள் மோதிக்கொண்ட காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நேற்று நள்ளிரவில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் நோக்கி தங்களது சொந்த ஊர்களுக்கு கார் மற்றும் பஸ்களில் சென்றவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story