1 வயது குழந்தையை கடத்த முயற்சி செய்தவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
சென்னை திருவல்லிக்கேணி ரெயில் நிலையம் அருகே சாலையோரம் வசிப்பவரின் 1½ வயது பெண் குழந்தையை கடத்த முயற்சி செய்தவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
அடையாறு,
சென்னை திருவல்லிக்கேணி ரெயில் நிலையம் அருகே சாலையோரம் வசிப்பவரின் 1½ வயது பெண் குழந்தையை கடத்த முயற்சி செய்தவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், அவரை போலீசில் ஒப்படைத்தனர்.
வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் தமிழகத்தில் உள்ள குழந்தைகளை கடத்திச்செல்வதற்காக காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புகுந்து உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள், குழந்தை கடத்தும் கும்பல் என நினைத்து அப்பாவிகளை தாக்கி வருகிறார்கள். இதுபோன்ற தாக்குதலுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர்.
எனவே குழந்தை கடத்தல் கும்பல் என அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம். யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம். சந்தேகப்படும் நபர்கள் குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி ரெயில் நிலையம் அருகே சாலையோரம் சுந்தர் என்பவர் தனது மனைவி வள்ளியுடன் வசித்து வருகிறார். இவரது 1½ வயது பெண் குழந்தை பவித்ரா, நேற்று மதியம் சாலையோரம் மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் குழந்தை பவித்ராவை கடத்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது. அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஜோசப், இதை பார்த்து கூச்சலிட்டான். சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடிவந்தனர்.
இதனால் பயந்து போன மர்மநபர், குழந்தையை கீழே விட்டு விட்டு தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரது கைகளை கட்டி வைத்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மெரினா போலீசார், அந்த நபரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர், திருவல்லிக்கேணி மாட்டங்குப்பத்தைச் சேர்ந்த பழனிவேல் (வயது 40) என்பது தெரிந்தது. அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.
எனவே அவர் உண்மையிலேயே குழந்தை பவித்ராவை கடத்த வந்தாரா? அல்லது குடிபோதையில் இப்படி நடந்துகொண்டாரா? என அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story