சிறப்புக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு


சிறப்புக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
x
தினத்தந்தி 12 May 2018 10:15 PM GMT (Updated: 12 May 2018 8:17 PM GMT)

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிறப்புக்குழு அமைத்து விசாரிக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு

மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது. தகுதியில்லாதவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு பேராசிரியர்களாக, அலுவலக பணியாளர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கடந்த 2013-ம் ஆண்டு தமிழக அரசு எடுத்துக்கொண்ட போது, அங்கு பணியாற்றி வந்த பேராசிரியர்கள், அலுவலர்கள் அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர்.

சிறப்புக்குழு அமைத்து விசாரணை

இவர்களுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாயை அரசு சம்பளமாக வழங்குகிறது. பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு மனு அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்கள், பணியாளர்களின் சான்றிதழ்களை தமிழக அரசு ஆய்வு செய்து முறைகேடாக பணியில் சேர்ந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சிறப்புக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், தமிழக கவர்னரின் செயலாளர், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Next Story