மருத்துவ படிப்பு சேர்க்கை: பிரதமருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்


மருத்துவ படிப்பு சேர்க்கை: பிரதமருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்
x
தினத்தந்தி 12 May 2018 8:20 PM GMT (Updated: 12 May 2018 8:20 PM GMT)

மருத்துவ படிப்பு சேர்க்கை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 2 மசோதாக்களை உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

மருத்துவ படிப்பு சேர்க்கை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 2 மசோதாக்களை உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டம் 2017 மற்றும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளுக்கான சேர்க்கை குறித்த தமிழ்நாடு சட்டம் 2017 ஆகிய இரு மசோதாக்களும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக இயற்றிட ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

ஜனாதிபதியின் முன்பாக இந்த சட்டங்களைக் கொண்டு செல்லாமல் காலந்தாழ்த்தி வருவது என்பது தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டு மாணவர்கள் எதிர்பாராத வகையில் ‘நீட்’ தேர்வு தயாரிப்பு மையங்களுக்கு பெருந்தொகை செலவிட வேண்டியுள்ளது. தமிழக மாணவர்கள் சி.பி.எஸ்.இ.யின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், சிரமங்கள் மற்றும் தொந்தரவுகளுக்கு மத்தியிலும் இந்த தேர்வினை எழுத வேண்டியிருந்தது.

குறிப்பாக கிராமப்புற மாவட்டங்களைச் சார்ந்த மற்றும் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவை சார்ந்த மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்கள் முன்னெப்போதும் இல்லாத பல்வேறு துயரங்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த பின்னணியில் இந்த மசோதாவை சட்டமாக்குவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசு இந்த மசோதாக்களை ஜனாதிபதியின் முன் வைக்காமல் காலந்தாழ்த்தி வருவது மாணவர் சமுதாயம் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

மாநிலத்தில் உள்ள மக்களின் நலன்களைக் காப்பதற்காக சட்டங்களை இயற்றுவதற்கான உரிமையை மாநில சட்டமன்றங்களுக்கு வழங்கியுள்ள இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்துகளை கருத்தில் கொண்டு, மேற்கூறிய 2 மசோதாக்களையும் மத்திய அரசு உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்து, மிக விரைவில் அவை சட்டமாகச் செயல்படும் வகையில் அவற்றுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story