சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை


சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் இளைஞர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை
x
தினத்தந்தி 14 May 2018 5:30 AM IST (Updated: 14 May 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில், இளைஞர் அணி செயலாளர் களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். #Rajinikanth

சென்னை, 

அண்மையில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் திரும்பியதும் தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார். கடந்த 9-ந் தேதி நடைபெற்ற ‘காலா’ திரைப்பட இசைவெளியீடு நிகழ்ச்சியிலும் தனது அரசியல் பயணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.

அதைத்தொடர்ந்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் கடந்த 10-ந் தேதி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, நேற்று போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து விரைவில் மகளிர் அணி செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் அனைவரும் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் ஒரே நேரத்தில் வேன்களில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

மண்டபத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட இளைஞர் அணி செயலாளர்களின் செல்போன்களை மாநில நிர்வாகிகள் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஒரு மணி நேரம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகள், அங்கு உள்ள வளர்ச்சி பணிகள், கிளைகள் அமைப்பது தொடர்பான நிலவரங்கள், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இளைஞர் அணியினருடனான சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது” என்று தெரிவித்து உள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரின்ஸ் டேனியல் கூறியதாவது:-

இளைஞர் அணியை வலுப்படுத்துவது எப்படி? மக்களை சேர்ப்பது எப்படி? இளைஞர்களை சேர்ப்பது எப்படி? என்று ரஜினிகாந்த் ஆலோசனை கூறியிருக்கிறார். கூடிய விரைவில், தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இளைஞர்கள் எங்கள் கட்சியில் சேர இருக்கின்றனர். அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இளைஞர்கள் இருக்கும் இடத்தில் நல்ல பெயரை சம்பாதிப்பது ஒன்றே கட்சியை வலுப்படுத்தும் வழி என்று ஆலோசனை கூறினார். நாங்கள் யாரும் பணத்தை நம்பி வரவில்லை. ரஜினிகாந்துக்கு என்று தனி ரசிகர்கள், தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எல்லா வேலையையும் பார்த்துக்கொள்கிறார்கள்.

ரஜினிகாந்த் முதல்-அமைச்சராக வேண்டும் என்று விரும்புகிறவர்கள் எங்களை வந்து சந்திக்கிறார்கள். நாங்களும் அவர்களை நேரில் சென்று சந்தித்து வருகிறோம். நாங்கள் சென்று சந்திப்பதை விட, எங்களை தேடி வருபவர்களே அதிகமாக உள்ளனர். கட்சி அறிவிப்பு வெளிவருவதற்கு முன் மிகப்பெரிய தொண்டர் கூட்டம் தயாராகிவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேனி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கணேஷ் கூறும்போது, “கூட்டத்தில், ஸ்டெர்லைட் பிரச்சினை, நியூட்ரினோ பிரச்சினைகள் குறித்து கூறினோம். அதனை காலப்போக்கில் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு கட்டமைப்பை ஏற்படுத்துங்கள், இளைஞர்களை அதிகப்படுத்துங்கள், வலுப்படுத்துங்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்” என்று கூறினார்.

நேற்று நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 38 செயலாளர்கள், புதுச்சேரியை சேர்ந்த 2 செயலாளர்கள் உள்பட 40 பேர் கலந்துகொண்டனர். கோவை மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நேற்று பிற்பகலில் ரஜினிகாந்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

Next Story