9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு


9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
x
தினத்தந்தி 15 May 2018 5:30 AM IST (Updated: 15 May 2018 12:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது.

சென்னை, 

பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.

அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண்கள் கம்ப்யூட்டர் மூலம் சான்றிதழில் பதிவு செய்யும் பணி நடந்தது. மீண்டும் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இப்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டன. நாளை (புதன் கிழமை) பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.

முதல் முதலாக தேர்வு முடிவு வெளியிடும் தேதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பே பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி தேர்வு முடிவு நாளை வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், www.dge.tn.nic.in,www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் மேற்கண்ட இணையதளத்திற்கு சென்று தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம்.


Next Story