காதலுக்காக மதம் மாறிய ராஜஸ்தான் வாலிபர் திடீர் மாயம் காதலியிடம் போலீஸ் விசாரணை


காதலுக்காக மதம் மாறிய ராஜஸ்தான் வாலிபர் திடீர் மாயம்  காதலியிடம்  போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 15 May 2018 3:15 AM IST (Updated: 15 May 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

காதலுக்காக மதம் மாறிய ராஜஸ்தான் வாலிபர் மாயமான புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த அவரது காதலியிடம் போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அடையாறு, 

காதலுக்காக மதம் மாறிய ராஜஸ்தான் வாலிபர் மாயமான புகாரின் பேரில் சென்னையை சேர்ந்த அவரது காதலியிடம் போலீசார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தேஜாராம் (வயது 55). இவர் தாம்பரத்தையடுத்த படப்பையில் தங்கி துணி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு துணையாக அவரது மகன் ஜிதேந்தர் (26) இருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜிதேந்தர் திடீரென மாயமானார். இதுகுறித்த விசாரணையில் அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததும், அந்த பெண்னை மணமுடிக்க சித்திக் என்பவரின் துணையுடன் மும்பை சென்றது தெரியவந்தது.

மேலும் மும்பை சென்ற ஜிதேந்தர் காதலிக்காக அங்கு முஸ்லிம் மதத்துக்கு மதம் மாறினார். அதைத்தொடர்ந்து அவர் தனது பெயரை முகமது இஸ்லாம் என்றும் மாற்றிக்கொண்டதும் அவரது குடும்பத்திற்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தேஜாராம் தனது மகனை தேடி மும்பை அகமத் நகர் சென்றார். பின்னர் அங்கு இருந்து கடந்த மார்ச் மாதம் தனது மகனை மீட்டு ராஜஸ்தானுக்கு அழைத்து சென்றார். ராஜஸ்தானுக்கு சென்ற தேஜாராம் தனது மகன் ஜிதேந்தரை மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்.

இதையடுத்து குடும்பத்தினரின் கண்காணிப்பில் இருந்த ஜிதேந்தர் கடந்த 2-ந்தேதி திடீரென மீண்டும் மாயமானார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை ராஜஸ்தானில் உள்ள பில்லாடா போலீசில் மகன் மாயமானது பற்றி புகார் அளித்தார்.

அதில் ‘தனது மகன் மாயமான சம்பவத்தில் சென்னையை சேர்ந்த இளம்பெண்ணிற்கும் தொடர்பு உள்ளதாகவும், அவரை பிடித்து விசாரித்தால் தனது மகன் இருக்கும் இடம் தெரிந்துவிடும்’ என குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் ஜிதேந்தரின் பெற்றோருடன் சென்னை வந்தனர்.

சென்னை கோர்ட்டூர்புரம் போலீசாருடன் இணைத்து ராஜஸ்தான் போலீசார் அந்த இளம் பெண்ணை அழைத்து விசாரித்தனர். அப்போது ஜிதேந்தர் மாயமான சம்பவம் பற்றி சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக ராஜஸ்தான் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால் 10 மணி நேர விசாரணையிலும் ஜிதேந்தரின் இருப்பிடம் குறித்து எந்த தகவலும் அந்த பெண்ணிடம் இருந்து போலீசாருக்கு கிடைக்கவில்லை. இது ஜிதேந்தரின் பெற்றோருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இது குறித்து ஜிதேந்தரின் தந்தை தேஜாராம் கூறுகையில் ‘எனது மகன் கடந்த ஒரு வருட காலமாக மும்பையில் தங்கியிருந்த போது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகமாக உள்ளது, அது மட்டும் இன்றி, வீட்டில் இருந்த காலக்கட்டத்தில் அவனது நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது’ எனவும் கூறினார்.

எனவே, இது காதல் விவகாரமா? அல்லது ஏதும் பயங்கரவாத அமைப்பு சம்பந்தபட்ட விவகாரமா? மாயமான வாலிபரின் கதி என்ன? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story