ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது ஐகோர்ட்டு கருத்து


ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது ஐகோர்ட்டு கருத்து
x
தினத்தந்தி 17 May 2018 10:18 PM GMT (Updated: 17 May 2018 10:18 PM GMT)

என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன், வக்கீல் பொ.பாண்டியன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

ஆன்லைனில் மட்டுமல்லாமல், விண்ணப்பத்தை மனுவாகவும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்குகளை விடுமுறைகால நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், ‘என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இந்தமுறை மாணவர் சேர்க்கைக்கு முழுமையாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கிராமப்புற மாணவர்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

ஆன்லைன் மூலமாக மாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்க தமிழகம் முழுவதும் உதவி மையங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தடையின்றி செய்துள்ளோம். இந்தப்பணி கடந்த மே 3-ந்தேதி முதல் தொடங்கிவிட்டது. விண்ணப்ப கட்டணத்தை கேட்பு காசோலையாக பெற்றுக்கொள்வதற்கும், மாணவர்களுக்கு உதவ தேவையான பயிற்சி பெற்ற நபர்களையும் நியமித்துள்ளோம்’ என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.

பொறியியல் சேர்க்கைக்கு சுமார் 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தையும், அதன்மூலம் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் ஆன்லைன் முறை குறைக்கிறது.

எனவே, ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ள உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதேநேரம் ஆன்லைனில் மட்டுமின்றி, விண்ணப்பத்தை மனுவாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது.

அதேநேரம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் ஏதேனும் சிரமங்களை சந்திக்க நேரிட்டால் அதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகத்திடம் மனுதாரர்கள் தாராளமாக முறையிடலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் நாளிதழ்கள் மூலமாக விளம்பரப்படுத்த வேண்டும்.

கேட்பு காசோலை மூலமாக விண்ணப்ப கட்டணத்தை பெறுவதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வரும் ஜூன் 8-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story