போராட்டம் நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபத்தமானது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


போராட்டம் நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபத்தமானது ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 21 May 2018 3:45 AM IST (Updated: 21 May 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபத்தமானது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆலந்தூர்,

மதுரையில் இருந்து சென்னை வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

கர்நாடக முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள குமாரசாமிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். காவிரி நதி நீர் பிரச்சினை காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இருக்கிறது. அந்த ஆணையம் தான் 15 வருடங்களுக்கு முடிவு செய்யக் கூடிய அமைப்பு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.

தண்ணீர் கிடைக்க தமிழக அரசு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும். ஜூன் மாதம் குறுவை, சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் போதிய நீர் இருக்கும் பட்சத்தில் ஜூன் 12-ந்தேதி அணையை திறப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறோம்.

நீர் பற்றாக்குறை இருந்தால் நிலைமைக்கு தகுந்தவாறு அணை திறக்கப்படும் என்பது கடந்த கால வரலாறு. இது தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் ஏற்கனவே நடந்து இருக்கிறது. எனவே, 12-ந்தேதி திறக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்துவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்வது அபத்தமானது.

பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்ற பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு தந்ததால்தான் இப்போது விலை உயர்ந்து கொண்டே போகிறது.

மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு செயல்படுகிறது என்று வைகோ கூறுவது தரங்கெட்ட கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story