வீட்டுமனையை பதிவு செய்ய 1,000 லஞ்சம்: காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது


வீட்டுமனையை பதிவு செய்ய 1,000 லஞ்சம்: காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 May 2018 3:47 AM IST (Updated: 22 May 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனையை பதிவு செய்ய ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக காஞ்சீபுரம் சார்பதிவாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில், காஞ்சீபுரம் இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த சங்கரன்(வயது 55) என்பவர் சார்பதிவாளராக உள்ளார்.

காஞ்சீபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நித்யா என்ற பெண் நேற்று மதியம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். காஞ்சீபுரம் அருகே கூரம் பக்கத்தில் உள்ள ஒரு இடத்தில் வீடுகட்ட வீட்டுமனையை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சார்பதிவாளர் சங்கரனிடம் விண்ணப்பித்தார்.

அதற்கு அவர், ரூ.1,000 லஞ்சமாக கொடுத்தால்தான் வீட்டுமனை பதிவு செய்யப்படும் என்று நித்யாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நித்யா, இதுபற்றி காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை நித்யாவிடம் கொடுத்து அதை லஞ்சமாக சார்பதிவாளரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

பின்னர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவபாதசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், காஞ்சீபுரம் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று மறைந்து இருந்தனர்.

நித்யா, சார்பதிவாளர் சங்கரனிடம் லஞ்சமாக ரூ.1,000 பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை வாங்கிய அவர், அருகில் இருந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரான காஞ்சீபுரத்தை சேர்ந்த ரஞ்சித் என்ற பார்த்திபன்(30) என்பவரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று, சார் பதிவாளர் சங்கரனையும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பார்த்திபனையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் இருக்கிறதா? எனவும், அங்குள்ள ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர்.

Next Story