ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு; தமிழக வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது கிடையாது - மு.க. ஸ்டாலின்


ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு; தமிழக வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது கிடையாது - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 22 May 2018 3:39 PM GMT (Updated: 22 May 2018 3:39 PM GMT)

தமிழக வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது கிடையாது. இந்த ஆட்சியில் நடந்திருப்பது வெட்கக்கேடானது என மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார். #MKStalin #SterliteProtest


சென்னை, 


தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்திரவிடக்கோரியும், கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பொதுமக்கள் பல மாதங்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறார்களே தவிர, இந்தப் போராட்டத்தை எப்படியாவது சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், ஒரு மிகப்பெரிய மக்கள் பேரணியை இன்றைக்கு பொதுமக்கள் நடத்தி இருக்கிறார்கள்.

 இந்த அரசின் ஆணைக்கேற்ப, காவல்துறையினர் பேரணி சென்ற மக்கள் மீது மிருகத்தனமாக, காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி உள்ளனர். இதனால் அங்கு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. அதன் உச்சகட்டமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் மேலும் அதிகமான கலவரம் இப்போது வரை நீடித்து வருகிறது. ஆனால், அந்தப் போராட்டத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி இந்த அரசு கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லை.

கோட்டையில் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் கூடி, பேசிக் கொண்டு இருக்கிறார்களே தவிர, இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக முதல்-அமைச்சர் இப்போது ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது, அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் தலைமை செயலாளரை நேரில் சந்தித்து முறையிட்டு இருக்கிறேன். 

எனவே, உடனடியாக இதற்கு ஒரு முடிவு காண வேண்டும், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். போராட்டம் பல மாதங்களாக நடைபெற்று, இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்து சுமார் 10 பேருக்கு மேல் இறந்து விட்டதாகவும், மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்ட மேலும் 10 முதல் 12 பேர் வரை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், இதனால் மிகப்பெரிய கலவரம் நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது. ஆனால், சுமுகமான சூழலை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த இப்போதுதான் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. 

கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரு ஆட்சி நடப்பது வெட்கக் கேடானது. தி.மு.க. சார்பில் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களை, குறிப்பாக கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை, போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு அனுப்பி வைத்து, அங்கு நடந்த சம்பவங்களையும், தற்போதைய சூழ்நிலைகளையும் அறிந்து, அறிக்கையாக தர வேண்டும் என்று நான் ஆணையிட்டு இருக்கிறேன்.

நாளை கர்நாடக மாநில முதல்-மந்திரி பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அந்த விழாவிற்கு நான் செல்ல இருந்தேன். தற்போது இந்த சம்பவம் நடந்திருப்பதால், அந்த நிகழ்ச்சிக்கு செல்வதை நான் ரத்து செய்துவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நானும், நாளை தூத்துக்குடிக்கு சென்று, அங்கு நடைபெற்றுள்ள சம்பவங்கள் குறித்து விசாரித்தறிந்து, பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து, தி.மு.க. சார்பில் ஆறுதல் தெரிவிக்க இருக்கிறேன்.

 இதுவரையிலும், தமிழக வரலாற்றிலேயே இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது கிடையாது. இந்த ஆட்சியில் நடந்திருப்பது வெட்கக்கேடானது. இந்த அரசு செயலற்றுக் கிடப்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு கிடையாது என்று கூறினார். 

Next Story