ஸ்டெர்லைட் ஆலையில் கீதா ஜீவன், வைகோ மருமகன் காண்டிராக்ட் எடுத்துள்ளதாக தகவல்


ஸ்டெர்லைட் ஆலையில் கீதா ஜீவன், வைகோ மருமகன் காண்டிராக்ட் எடுத்துள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 3:34 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், வைகோவின் மருமகன் ஆகியோர் காண்டிராக்ட் எடுத்துள்ளார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எல்லா பிரச்சினைக்கும் தமிழக அரசு தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் சற்று கடந்த கால வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை எனும் நிலைப்பாட்டை எடுத்தார். அவரின் அந்த நிலைப்பாட்டையே நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். எனவே எப்படி தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்? என்பது தெரியவில்லை.

அந்த ஆலையை வைத்து அரசியல் தான் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது அந்த ஆலைக்கு எதிரான பேரணிக்கெல்லாம் தலைமை தாங்கி வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவரது பெயரில் அங்கு 600 வண்டிகள் ஓடுவதாகவும் ஒரு தகவல். அதேபோல மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கியே தீருவேன் என்று அடம்பிடித்து வரும் வைகோவின் மருமகனும் ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாக ஒரு தகவல்.

ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி வருபவர்கள் இப்படியாக இருக்க, அந்த ஆலையை மக்கள் நலனுக்காக தேவையில்லை என்று முடிவில் உள்ள தமிழக அரசின் மீது குற்றம் சாட்டப்படுவதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். எது உண்மை, யார் நல்லவர்? என்று மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story