தூத்துக்குடி வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் குழு


தூத்துக்குடி வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் குழு
x
தினத்தந்தி 23 May 2018 10:29 AM IST (Updated: 23 May 2018 10:29 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வன்முறையில் காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவர்கள் குழு அங்கு சென்றுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.  இந்த ஆலையில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பாஸ்பாரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவையும் தயாரிக்கப்படுகிறது. மேலும் கூடுதலாக 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு இந்த ஆலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.

இந்த ஆலையின் கழிவுகளால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன என்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை மேலும் விரிவாக்கம் செய்வதை கைவிட்டு, நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதியில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்துக்கு 18 கிராம மக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று 100வது நாளாக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.  இதனால் போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தினர்.  இந்த சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.  65 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் அங்கு சென்றுள்ளனர்.  காயமடைந்த நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மதுரை, நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு அங்கு சென்றுள்ளது.  இதனை தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Next Story