தூத்துக்குடியில் 2ம் நாள் கலவரத்தில் துப்பாக்கி சூடு: பலி 12 ஆனது; போலீஸ் குவிப்பு
தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக கலவரம் நீடித்தது. பெட்ரோல் குண்டு வீசியவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி ஆனார். #Thoothukudi #SterliteProtest
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது.
கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தவர்கள் அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி தீவைத்து எரித்தனர். அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினார்கள். இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த சம்பவத்தில் 9 பேர் பலி ஆனார்கள். மேலும் திரேஸ்புரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி ஆனார். இந்த இரு சம்பவங்களிலும் பலர் காயம் அடைந்தனர்.
துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், காயம் அடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆஸ்பத்திரி வளாகத்தில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார், மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள், துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு உள்ள பிணவறை அருகே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும், போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். அதாவது, தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடக்கூடாது என்றும், எனவே, அனைவரும் உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்றும் எச்சரித்தனர்.
ஆனால், மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அங்கிருந்து வெளியேறியவர்கள் ஆஸ்பத்திரியின் முன் பகுதியில் திரண்டனர்.
அப்போது, துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை பார்ப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், வருவாய் அலுவலர் வீரப்பன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்களை பார்த்த பொதுமக்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பியபடி ஓடிவந்து கலெக்டரை தாக்க முயன்றனர்.
உடனே போலீசார் பொதுமக்களை ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து வெளியேற்றினார்கள். இதையடுத்து கலெக்டர் வெங்கடேஷ் காயம் அடைந்தவர்களை பார்ப்பதற்கு ஆஸ்பத்திரிக்குள் சென்றார்.
இதற்கிடையே, ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் காம்பவுண்டு சுவருக்கு வெளியே நின்றபடி போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கினார்கள். கூட்டத்தில் இருந்து திடீரென்று போலீசார் மீது 2 நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. ஆனால் போலீசார் விலகிச் சென்றதால் அந்த வெடிகுண்டுகள் கீழே விழுந்து வெடித்தன. இதனால் போலீசார் உயிர்தப்பினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மீண்டும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பொதுமக்களை கலைத்தனர். 100 அடி தூரத்திற்கு அவர்களை அடித்து விரட்டினார். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் அங்கு போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த சமயத்தில் தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் ஜீப் மீது கற்களை வீசி தாக்கினார்கள். அங்கு நின்ற போலீசார் அவர்களை சுற்றிவளைத்து தாக்கி 2 பேரையும் தூக்கிச் சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க ஆஸ்பத்திரி முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது, மறைந்து இருந்த மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் ஒரு கும்பல் திடீரென்று போலீஸ் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசியது. இதனால் போலீசார் அந்த கும்பலை அடித்து விரட்டினார்கள். அங்கு இருந்து ஓடிய கும்பல் பிரையண்ட் நகர் 2-வது தெருவில் போலீசார் நிறுத்தி வைத்து இருந்த 2 பஸ்களுக்கு தீ வைத்தனர். இதில் ஒரு பஸ் முழுமையாக தீப்பற்றி எரிந்தது. மற்றொரு பஸ்சில் பற்றிய தீ உடனே அணைக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
தூத்துக்குடி அண்ணா நகர் 6-வது தெரு பகுதியில் சிலர் கும்பலாக திரண்டு நிற்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது, சிலர் போலீசார் மீது மீண்டும் பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்கினார்கள். இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரனின் இடது காலில் கல் பட்டதால் ரத்தம் கொட்டியது. மேலும் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், போலி துப்பாக்கி குண்டுகள் மூலம் சுட்டும் போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டினார்கள்.
அண்ணாநகர் 6, 7-வது தெருக்களில் போராட்டக்காரர்களும், அங்கு இருந்து 100 மீட்டர் தூரத்தில் மெயின் ரோட்டில் போலீசாரும் நின்று கொண்டு எதிரெதிர் தாக்குதல் நடத்தினர். அந்த பகுதியில் மட்டும் சுமார் 1½ மணி நேரத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் போலீசார் மீது தொடர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
அண்ணா நகர் 6-வது தெருவில் போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இதில் ரப்பர் குண்டு தாக்கியதில் தூத்துக்குடி ராம்தாஸ் நகரைச் சேர்ந்த காளியப்பன் (வயது 22) என்பவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும் போலீசார் தாக்கியதாகவும், ரப்பர் குண்டுகள் தாக்கி படுகாயம் அடைந்ததாகவும் 8 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன் (50) என்பவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு மரணம் அடைந்தார்.
இதனால் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
நேற்று முன்தினம் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. லாரிகள் இயங்கவில்லை. இதனால் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை. இந்த போராட்டம் காரணமாக போலீசார் இதுவரை 265 பேரை பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் கூறுகையில், “தூத்துக்குடி மாநகரத்தில் நடந்து வரும் போராட்டத்தில் வெளியூர்களில் இருந்து வேறு ஆட்கள் வந்து வன்முறையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்தது. இதனால் நாங்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளோம். வன்முறையாளர்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வன்முறையாளர்கள் குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.
வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களால் தூத்துக்குடியில் நேற்று 2-வது நாளாக பதற்றம் நிலவியது. இதனால் நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story