தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 24 May 2018 5:30 AM IST (Updated: 24 May 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தி.மு.க. தலைமையில் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. #MKStalin

சென்னை, 

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தி.மு.க. தலைமையில் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, அமைச்சர்களோ இதுவரை தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறவோ, தவறு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ முன் வராமல் தனியார் ஸ்டெர்லைட் ஆலையின் நலன்களுக்காக தூத்துக்குடியையே போர்க்களமாக்கி, பொதுமக்கள் மீது அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் அ.தி.மு.க. அரசின் மீது தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆத்திரத்திலும், கடும் கோபத்திலும் இருக்கிறார்கள்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்து விட்டு, தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும், அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தால் அடுத்தடுத்து நடத்தப்பட்டுள்ள விபரீதமான துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூட வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றி பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதில் முழுமையாக தோற்றுவிட்ட அ.தி.மு.க. அரசு பதவி விலகக் கோரியும் தி.மு.க, காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் அறவழியில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த முழு அடைப்பில் அனைத்து தர மக்களும் பங்கேற்று வெற்றிகரமாகவும், அதே நேரத்தில் ஜனநாயக வழியில் அமைதியாகவும் நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story