தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் 35 இடங்களில் போராட்டம் 2 ஆயிரம் பேர் கைது
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சென்னையில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் 35 இடங்களில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.
சென்னை
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சென்னையில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் 35 இடங்களில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சென்னையில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்படுகிறது.
நேற்று 2-வது நாளாக காலையில் தொடங்கி மாலை வரை சென்னையில் சுமார் 35 இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்தன. சென்னை நொச்சிக்குப்பம், அயோத்திகுப்பம் பகுதிகளில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளுவர் கோட்டம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்திய சாலைமறியல் போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பீமாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை அண்ணாசாலை எல்.ஐ.சி. அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பிராட்வே பகுதியில் கோட்டை நோக்கி ஊர்வலமாக சென்ற வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல நடந்த போராட்டங்களில் 500 பெண்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டதாக நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது 12 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சில அமைப்புகளை சேர்ந்தவர்களையும் சிறையில் அடைக்கப்படுவார்கள் போலீசார் தெரிவித்தனர்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) மாலை தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி நேற்று இரவில் இருந்தே போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள அமைப்புகளின் தலைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்கள். இந்த போராட்டத்தையொட்டி இன்று திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் பகுதிகளிலும், கோட்டை பகுதிகளிலும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள். நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சிலர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தூத்துக்குடியை போல் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்று சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் செய்துள்ளார்.
Related Tags :
Next Story