தூத்துக்குடியில் கலவரத்தை அடக்க போலீசார் பயன்படுத்திய எஸ்.எல்.ஆர். நவீன துப்பாக்கி


தூத்துக்குடியில் கலவரத்தை அடக்க போலீசார் பயன்படுத்திய எஸ்.எல்.ஆர். நவீன துப்பாக்கி
x
தினத்தந்தி 23 May 2018 10:30 PM GMT (Updated: 23 May 2018 9:16 PM GMT)

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டு பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.

சென்னை, 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டு பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் தாக்குப்பிடிக்க முடியாமல் போலீசார் பின்வாங்கி ஓடினார்கள். இதனால் அங்கு கலவரத்தை அடக்க அதிரடிப்படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதில் 12 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார்கள். 12 பேரின் உயிரை பலி வாங்கிய துப்பாக்கி சூட்டிற்கு போலீசார் எஸ்.எல்.ஆர். எனப்படும் நவீன ரக தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளனர். இந்த துப்பாக்கியில் இருந்து புறப்படும் குண்டுகள் 800 மீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் சக்தி வாய்ந்தது.

ஆரம்பத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த துப்பாக்கி தற்போது போலீஸ் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த துப்பாக்கியில் 25 குண்டுகள் வரை இருக்கும் என்றும், சாதாரணமாக சுட்டால் ஒரு நேரத்தில் ஒரு குண்டுதான் பாயும் என்றும், அதிவிரைவாக சுட விசையை அழுத்தினால் ஒரே நேரத்தில் 3 குண்டுகள் வரை பாயும் என்றும் இந்த துப்பாக்கிகளை பயன்படுத்தும் அதிரடிப்படை போலீசார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிகளை சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம், டி.ஜி.பி. அலுவலகம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிவிரைவுப்படை போலீசார் பயன்படுத்துகிறார்கள். முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணிக்குச் செல்லும் போலீசாரும் இந்த துப்பாக்கிகளைத்தான் கையில் ஏந்தி செல்கிறார்கள்.

பொதுவாக துப்பாக்கி சூடு நடத்தும்போது இடுப்புக்கு கீழேதான் சுடவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் பலர் தலைப்பகுதியில் குண்டு பாய்ந்து இறந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Next Story