தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலி: கவர்னருடன், முதல்-அமைச்சர் திடீர் சந்திப்பு
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென்று சந்தித்தார்.
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென்று சந்தித்தார். அப்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்ட சம்பவம் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கியதை தொடர்ந்து, மத்திய அரசிடம் விளக்கம் அளிப்பதற்கு தமிழக அரசுக்கு நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. எனவே கவர்னரை சந்தித்து முதல்-அமைச்சர் உரிய தகவல்களை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதை நேற்று இரவு அவசரமாக ரத்து செய்துவிட்டு கோவை வந்தார். கோவையில் இருந்து விமானம் மூலம் அவர் சென்னை திரும்பினார். பின்பு நேற்று இரவு 9.17 மணி அளவில் அவர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9.25 மணிக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகைக்கு வந்தார். அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் வந்தார். இரவு 9.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் உடனிருந்தார். இந்த சந்திப்பு இரவு 10 மணி வரை நீடித்தது.
அப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் குறித்தும், தற்போது அங்குள்ள நிலைமை குறித்தும் முதல்-அமைச்சர் கவர்னரிடம் விளக்கம் அளித்தார். அதை கவர்னர் கேட்டுக்கொண்டார். முதல்-அமைச்சர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடிதம் எழுதுவார் என்று தெரியவருகிறது. அக்கடிதம் கிடைத்தபின்பு மத்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என தெரிகிறது.
Related Tags :
Next Story