ஈரோட்டில் ம.தி.மு.க. மாநாடு செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது


ஈரோட்டில் ம.தி.மு.க. மாநாடு செப்டம்பர் 15-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 25 May 2018 1:22 AM IST (Updated: 25 May 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

25-வது ஆண்டில் ம.தி.மு.க. அடியெடுத்து வைத்துள்ளதையொட்டி, முப்பெரும் விழா மாநாடு செப்டம்பர் 15-ந்தேதி ஈரோட்டில் நடைபெறுகிறது.

சென்னை,

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு மற்றும் அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். பொருளாளர் கணேசமூர்த்தி, துணை பொதுச்செயலாளர்கள் துரை பாலகிருஷ்ணன், ஏ.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

1994-ம் ஆண்டு மே 6-ந்தேதி உதயமான ம.தி.மு.க. 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வெள்ளிவிழாவுடன், பெரியார்-அண்ணா பிறந்தநாள் விழாக்களையும் இணைத்து முப்பெரும் விழா மாநாடு செப்டம்பர் 15-ந்தேதி ஈரோட்டில் நடக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி உத்தரவை எதிர்த்து, 7 நீதிபதிகளை கொண்ட அரசியல்சாசன அமர்வின் விசாரணைக்கு அனுப்பக்கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்யவேண்டும்.

தூத்துக்குடியில் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பதுடன், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பின்கீழ் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா கொள்கையை திணிக் கும் வருணாசிரம முறையை மத்திய அரசு கைவிடவேண்டும்.

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவுக்கு உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும். விவசாய நிலங்களை அழிக்கும் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

‘வால்மார்ட்’ இணைய வணிகத்தை தடை செய்யவேண்டும். 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மதவெறியை புகுத்தும் வகையில் தொகுக்கப்பட்டு உள்ள பாடங்களை நீக்கவேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்களை மாற்றும் வேலை வரம்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்த கூடாது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் வைகோ நிருபர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடியில் திட்டமிட்ட படுகொலையை போலீசார் நிகழ்த்தி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும். இல்லையென்றால் அந்த ஆலையை அடித்து நொறுக்கும் போராட்டம் தான் அடுத்த நடவடிக்கையாக இருக்கும். சுட்டுக்கொல்லப்பட்டோர் வீடுகளுக்கு நான் உள்பட அரசியல் தலைவர்கள் சென்றது தவறு என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். அவர் தூத்துக்குடி சென்று அங்குள்ள மக்களிடம் பேசமுடியுமா?” என்றார்.

Next Story