சென்னை வடபழனியில் துணிகரம் நிதி நிறுவன அதிபரை காரில் கடத்தி ரூ.33 லட்சம், 28 பவுன் நகை பறிப்பு


சென்னை வடபழனியில் துணிகரம் நிதி நிறுவன அதிபரை காரில் கடத்தி ரூ.33 லட்சம், 28 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 26 May 2018 3:15 AM IST (Updated: 26 May 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

வடபழனியில் நிதிநிறுவன அதிபரை காரில் கடத்தி ரூ.33 லட்சம் மற்றும் 28 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்பேடு, 

வடபழனியில் நிதிநிறுவன அதிபரை காரில் கடத்தி ரூ.33 லட்சம் மற்றும் 28 பவுன் நகை, விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் விவேகானந்தபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மோகன்(வயது 49). இவர் வடபழனி, பிள்ளையார் கோவில் தெருவில் விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நிதிநிறுவனம் நடத்திவருகிறார். ஒரு மாதத்துக்கு முன்பு வங்கிக் கடன் வாங்கித்தரும் முகவர் என்று கூறிக்கொண்டு சரவணகுமார் என்பவர் மோகனுக்கு அறிமுகமானார். அதன்பிறகு அவர்களுக்கு இடையே நட்பு தொடர்ந்தது.

இந்தநிலையில் கடந்த 23-ந் தேதி மோகனை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய சரவணகுமார், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுகிறது என்றார். எனவே அந்த கம்பெனிக்கு சென்று பார்த்துவிட்டு வருவோம் என்றார்.

அதன்படி சரவணகுமார், வடபழனியில் உள்ள மோகனின் அலுவலகத்துக்கு காரில் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு காரில் சென்றார். சரவணகுமார், மோகன் மற்றும் டிரைவர் ஆகிய 3 பேர் மட்டுமே காரில் இருந்தனர். ஆனால் கார் கிழக்கு கடற்கரை சாலை நோக்கி செல்லாமல் தாம்பரம் நோக்கி சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த மோகன், சரவணகுமாரிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர், போக்குவரத்து நெரிசல் காரணமாக பாதை மாறிச்செல்வதாக கூறினார். இதனால் அவர் சமாதானம் அடைந்தார். கார் தாம்பரத்தை அடுத்த மப்பேடுக்குள் நுழைந்து ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் நின்றது. அங்கிருந்த மேலும் 3 பேர் காரில் ஏறிக்கொண்டனர்.அவர்கள் மோகனின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ.1 கோடி தரும்படி கேட்டு மிரட்டினர். இதனால் மோகன் அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகு தான் அவருக்கு காரில் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

பின்னர் மோகன், தற்போது தன்னிடம் ரூ.33 லட்சம் மட்டுமே உள்ளதாக கூறினார். அதற்கு சரவணகுமார் உள்பட 5 பேரும், கோயம்பேடில் உள்ள தமிழக தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பு வரும் எங்கள் கூட்டாளியிடம் அந்த பணத்தை கொடுத்தால் தான் உன்னை இங்கிருந்து விடுவிப்போம் என்றனர்.

இதையடுத்து மோகன், தனது சகோதரரை செல்போனில் தொடர்புகொண்டு ரூ.33 லட்சத்தை கோயம்பேடு சென்று, அங்குள்ளவரிடம் கொடுக்கும்படி கூறினார். அவரும் அதன்படி பணத்தை கொடுத்ததாக தெரிகிறது.

பணம் கைமாறிய தகவல் உறுதி ஆனதும், 5 பேரும் மோகன் அணிந்து இருந்த 28 பவுன் நகைகள், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் பறித்துக்கொண்டனர்.

பின்னர் அவரை மப்பேடு கிராமத்துக்கு வெளியே காரில் அழைத்துவந்து சென்னை -திருச்சி நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டு சரவணகுமார் உள்பட 5 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர்.இதுகுறித்த புகாரின்பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சரவணகுமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

மோகன் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து நிதிநிறுவனம் நடத்தி வருகையில் இவரை மட்டும் குறிப்பிட்டு கடத்தி இருப்பதும், மோகன் 28 பவுன் நகைகள் அணிந்து இருந்ததும் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story