சாலையோரம் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் தலை சிதறி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் தலை சிதறி இறந்தது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அருகே சாலையோரம் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் தலை சிதறி இறந்தது. ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏடூர் ஊராட்சிக்கு உட்பட்டது கும்புளி கிராமம். நேற்று காலை இங்கு உள்ள பெருமாள் கோவில் தெருவில் பந்து போன்று சிறிய அளவிலான ஒரு மர்ம பொருள் சாலையோரம் கிடந்தது.
இதை பார்த்த 2 நாய்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டவாறு அந்த பொருளை கவ்வின. இதில் ஒரு நாய் கடித்தபோது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனையடுத்து தலை சிதறிய நிலையில் அந்த நாய் இறந்தது.
தகவலறிந்து கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் நாய் கடித்த அந்த மர்ம பொருள் நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த வெடிகுண்டை குழந்தைகள் யாரும் எடுத்து விளையாடவில்லை. ஆள்நடமாட்டம் உள்ள பகுதியில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது யார்? என்பது பற்றி ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story