ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வசந்த மண்டபத்தில் தீ பக்தர்கள் அதிர்ச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வசந்த மண்டபத்தில் தீ பக்தர்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 27 May 2018 12:28 AM GMT (Updated: 27 May 2018 12:28 AM GMT)

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவம் நடந்து வருகிறது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபம் நோக்கி வந்தார்.

ஸ்ரீரங்கம், 

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவம் நடந்து வருகிறது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு புறப்பட்டு வசந்த மண்டபம் நோக்கி வந்தார்.

அப்போது நம்பெருமாளுக்கு முன்பாக கோவில் ஊழியர்கள் தீப்பந்தம் ஏற்றி சென்றனர். இந்தநிலையில் நம்பெருமாள் வசந்த மண்டபத்தை வந்தடையும் போது மாலை 5.45 மணி அளவில் திடீரென தீப்பந்தத்தில் இருந்து தீப்பொறி பரவி மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த வெட்டிவேர் தோரணத்தின் மீது பட்டது. இதில் அந்த தோரணம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், பட்டர்கள் உடனடியாக அந்த தீயை அணைத்து, தோரணத்தை அகற்றினர். இந்த சம்பவத்தால் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவல் வேகமாக பரவியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 24-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கருவறையில் ஒருவர் பையை வீசிய சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று கோவிலில் வெட்டிவேர் தோரணத்தில் தீப்பிடித்த சம்பவம் என தொடர் அசம்பாவித சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமில்லாமல், பக்தர்களை பெரும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Next Story