போலீஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க. பிரமுகர் பெண் இன்ஸ்பெக்டரே பாட்டுப்பாடி கேக் ஊட்டியதால் சர்ச்சை


போலீஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க. பிரமுகர் பெண் இன்ஸ்பெக்டரே பாட்டுப்பாடி கேக் ஊட்டியதால் சர்ச்சை
x
தினத்தந்தி 27 May 2018 12:38 AM GMT (Updated: 27 May 2018 12:38 AM GMT)

மன்னார்குடி அருகே போலீஸ் நிலையத்தில் தி.மு.க. பிரமுகர் பிறந்தநாள் கொண்டாடினார்.

மன்னார்குடி, 

மன்னார்குடி அருகே போலீஸ் நிலையத்தில் தி.மு.க. பிரமுகர் பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு பெண் இன்ஸ்பெக்டரே பாட்டுப்பாடி கேக் ஊட்டிய சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூரில் கடந்த 24-ந்தேதி தி.மு.க. சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

கைதானவர்களில் நீடாமங்கலம் ஒன்றிய தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சிவச்சந்திரனும் ஒருவர். அவருக்கு அன்றைய தினம் பிறந்தநாள் ஆகும்.

இதனைதொடர்ந்து போலீஸ் நிலையத்திலேயே அவர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இன்ஸ்பெக்டர் ஜெயந்தி முன்னிலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.

பிறந்தநாள் கொண்டாடிய சிவச்சந்திரனுக்கு இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பாட்டு பாடி கேக் ஊட்டி விட்டார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அ.தி.மு.க.வினருக்கும், டி.டி.வி.தினகரன் அணியினருக்கும் இடையே கொடியேற்றுவதில் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது கருவாக்குறிச்சி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் அக்கட்சியின் கொடியை இதே இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஏற்றிய சம்பவம் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Next Story