வேல்முருகன் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்


வேல்முருகன் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 May 2018 6:50 PM GMT (Updated: 2018-06-01T00:20:08+05:30)

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை பொய் வழக்குகளில் கைது செய்து புழல் சிறையில் தமிழக அரசு அடைத்துள்ளது.

சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை பொய் வழக்குகளில் கைது செய்து புழல் சிறையில் தமிழக அரசு அடைத்துள்ளது. அவர் மீது தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட புதிய வழக்குகள் புனையப்பட்டுள்ளன. இதை வன்மையாக கண்டிக்கிறோம். வேல்முருகன் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே திரும்பப்பெறவேண்டும்.

தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுப்பதிலும், போராடுவதிலும் முனைப்போடு இருப்பவர்கள் மீது பொய் வழக்குகளை புனைந்து அவர்களை முடக்கிவிடலாம் என தமிழக அரசு எண்ணுகிறது. அதுவும் கூட மத்திய அரசின் நெருக்கடி காரணமாகவே தமிழக அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது.

காவிரி பிரச்சினையில் முதல்-அமைச்சர் உள்பட தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்காக வாதாடிய வக்கீல் நபாதேவும் ‘மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது’ என்று குற்றம்சாட்டிய நிலையில் காவிரி பிரச்சினையில் மத்திய அரசை கண்டித்துப் பேசினார் என்பதற்காக வேல்முருகன் மீது மட்டும் தேசவிரோத வழக்கு போடப்பட்டிருப்பது ஏன்? தமிழக அரசு இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிட்டு ஜனநாயக பண்போடு நடந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story