ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகம் மீண்டும் திறக்க முயன்றால் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்


ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகம் மீண்டும் திறக்க முயன்றால் தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 1 Jun 2018 12:15 AM GMT (Updated: 2018-06-01T00:39:17+05:30)

மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகம் மீண்டும் திறக்க முயன்றால், அதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது.

புதுடெல்லி,

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் கடந்த 1996-ம் ஆண்டு முதல், வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வந்தது.

இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த 22-ந்தேதி இந்த போராட்டம் நூறாவது நாளை எட்டியதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஏராளமானோர் அங்கு பேரணியாக திரண்டு சென்றனர்.

அப்போது கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலி ஆனார்கள். மேலும் பலர் காயம் அடைந்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்தது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு கடந்த 28-ந்தேதி உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணை யும் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் கதவுகள் மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆலைக்கு குடிநீர் மற்றும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும், அரசின் ஆணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிர்வாகம் மீண்டும் திறக்க முயன்றால், அதை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இது தொடர்பாக தமிழக அரசின் வக்கீல் யோகேஷ் கன்னா தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் ஏதேனும் மனு தாக்கல் செய்தால், அந்த வழக்கு விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்டு முடிவு எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

இதேபோல், தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் தமிழக அரசின் சார்பில் வக்கீல் ராகேஷ் சர்மா நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவிலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஏதேனும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் கருத்தையும் கேட்டு அறியவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story