மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மதுபானத்தை சப்ளை செய்தது, யாருடைய ஆலை?


மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மதுபானத்தை சப்ளை செய்தது, யாருடைய ஆலை?
x
தினத்தந்தி 1 Jun 2018 9:22 PM GMT (Updated: 1 Jun 2018 9:22 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மதுபான சப்ளை செய்தது, யாருடைய ஆலை? என்று டி.டி.வி. தினகரனுக்கு அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், சுயேச்சை உறுப்பினர் டி.டி.வி. தினகரன் மதுக்கடைகள் குறைப்பு குறித்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு.

டி.டி.வி. தினகரன்:- 2016-ம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மதுக்கடைகளை குறைப்பேன் என்று மறைந்த ஜெயலலிதா குறிப்பிட்டு இருந்தார். அதன்படி பதவி ஏற்றதும் 500 மதுக்கடைகளை மூட அவர் உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்போது 3,866 கடைகள் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த மே 21-ந்தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி 810 கடையை மீண்டும் திறக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கிறது. அம்மா (ஜெயலலிதா) வழியில் நடப்பதாக சொல்லிக்கொள்ளும் இந்த அரசு மீண்டும் மதுக்கடைகளை திறக்க முயற்சி செய்வது சரியா? இதற்கு என்ன காரணம்?.

(இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசியதும் அவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பினர். தொடர்ந்து பேச முயன்ற டி.டி.வி. தினகரனுக்கு மைக் கொடுக் கப்படவில்லை)

அமைச்சர் தங்கமணி:- 2016 தேர்தல் அறிக்கையில் சொன்னபடி படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து பூரண மது விலக்கு கொண்டு வருவது தான் நமது கொள்கை என்று ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 23.5.2016-ல் 500 மதுக்கடையை மூட கையெழுத்திட்டார். அதன் பிறகு ஜெயலலிதா பிறந்த நாளில் 500 கடைகள் மூடப்பட்டது. இப்போது 3,866 கடைகள் உள்ளன.

பக்கத்து மாநிலங்களில் இருந்து கள்ளச்சாராயம் வந்து விடக்கூடாது என்பதில் அரசு மிகவும் கவனமுடன் உள்ளது. அதற்கேற்ப சில நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம். 2002-ல் இருந்து தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளுக்கு 25 சதவீதம் மதுபான சப்ளை செய்தது, யாருடைய ஆலை?. எந்த குடும்பத்தை சார்ந்தது?. மதுக்கடைகளை குறைக்க வேண்டும் என்று பேசுபவர்கள் அவர்களது மதுபான ஆலையை மூடியிருக்க வேண்டியது தானே.

அமைச்சர் தங்கமணி இவ்வாறு குறிப்பிட்டதும், டி.டி.வி. தினகரன் அதற்கு பதில் அளிக்க முயன்றார். ஆனால் அவருக்கு மைக் தரப்படவில்லை. இருப்பினும் அவர் மைக் இல்லாமலேயே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். மைக் இல்லாமல் டி.டி.வி. தினகரன் பேசிய பேச்சு அவை குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அவையில் இருந்து வெளியேறினார். அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் போ...போ...என்று கூச்சலிட்டனர். மேலும் உர்...உர்...என்று ஊளையிட்டனர்.

உடனே டி.டி.வி. தினகரன் வெளியே செல்லாமல் மீண்டும் தனது இருக்கைக்கு வந்து அ.தி.மு.க. உறுப்பினர்களை பார்த்து முறைத்தார். அப்போது அவை மிக அமைதியாக இருந்தது. பின்னர் டி.டி.வி. தினகரன் வெளிநடப்பில் ஈடுபட்டார்.

Next Story