நிவாரண உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்வு சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு


நிவாரண உதவித்தொகை இரண்டு மடங்கு உயர்வு சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2018 11:00 PM GMT (Updated: 2018-06-02T03:57:08+05:30)

மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கான நிவாரண உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-

1991-ம் ஆண்டு இந்தத் துறையின் அமைச்சராக நான் பதவி ஏற்ற காலகட்டத்தில் தமிழகத்தில் 4 ஆயிரம் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை 45 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மீனவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில், தூத்துக்குடியில் கடலரிப்பைத் தடுக்க சுவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள ஆய்வு நடத்தப்படுகிறது. விழுப்புரம் பொம்மியார்பாளையத்தில் கடற்கரை பாதுகாப்புக்காக தடுப்புச் சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கடலூர் தாலுகாவில் கடற்கரை பாதுகாப்புப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் நம்பியார்நகரில் சிறிய மீன்பிடி துறைமுகத்தை தன்னிறைவுத் திட்டத்தில் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

செருதூர் மீன் இறங்கு தள முகத்துவாரத்தை ஆழப்படுத்தியும், அகலப்படுத்தியும் சுவர் அமைப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும். பழவேற்காடு முகத்துவாரத்தை சுவர் அமைத்து மேம்படுத்துவது குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஆய்வில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு. சென்னை மீன்பிடி துறைமுகத்தில் படகு நிறுத்தும் இடத்தில் இடநெரிசலை குறைப்பதற்காக படகு அணையும் தளம் நீட்டித்து அமைக்கப்படும்.

பாரம்பரிய மீனவர்களின் மீன்பிடி திறன் மற்றும் மீன் உற்பத்தியை அதிகரிக்க ஏதுவாக 50 சதவீத மானியத்தில் எந்திரங்கள் வழங்கப்படும். மிதவைக் கூண்டுகளில் மீன்வளர்ப்புக்குத் தேவையான மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்ய, கடல் மீன் குஞ்சு வளர்ப்பகம் அமைக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட மீனவ மகளிரின் வாழ்வாதாரத்துக்கு கடற்பாசி வளர்ப்பு மற்றும் உபபொருட்கள் தயாரிப்பு அலகு அமைக்கப்படும். காஞ்சீபுரம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மீன் குஞ்சு வளர்ப்பு நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.

தனியார் மீன்பண்ணையார்களை ஊக்குவிக்கும் விதமாக மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.30 லட்சம் மானியம் வழங்கப்படும்.

சென்னை ராயபுரத்தி உள்ள மத்திய சமையலறைக் கூடத்தில், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்துடன் இணைந்து, மீனவ மகளிர் குழுக்கள், தொழில்முனைவோருக்கு கடல் உணவு தயாரிப்பு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும்.

சென்னை, மதுரையில் நவீன மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும். தூத்துக்குடி, தேங்காய்ப்பட்டணம், குளச்சல், சின்னமுட்டம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் கூட்டுறவு கடைகள் அமைக்கப்படும்.

மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நிவாரண உதவித் தொகை, மீன்பிடிப்பில் இறப்பு நேரிட்டால் தரப்படும் ஒரு லட்சம் ரூபாய் இரண்டு லட்சம் ரூபாயாகவும்; கை, கால் இழப்புக்காக தரப்படும் உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும்; வேறு காயங்களுக்குத் தரப்படும் உதவித்தொகையான ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரமாக உயர்த்தி தரப்படும்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைச் சுற்றி அமைந்துள்ள 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சென்னை மாதவரத்தில் மறுசுழற்சி முறையில் கொடுவா மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தில் ஒருங்கிணைந்த பல் அடுக்கு நீர்வாழ் உயிரின வளர்ப்பு என்ற புதிய தொழில்நுட்பம், மீனவர்களின் மாற்று வாழ்வாதாரத்துக்காக செயல்படுத்தப்படும்.

பழவேற்காடு ஏரியில் மீன்வளத்தை அதிகரிக்கும் வகையில் செயற்கை பவளப்பாறைகள் மற்றும் மீன்களைத் திரட்டும் செயற்கை பாறைகள் நிறுவப்படும். பள்ளிக்கல்வியை தொடர இயலாத, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையும் வகையில் திருவள்ளூர், காஞ்சீபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் நவீன மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் மிதவைக் கூண்டில் மீன் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு கூண்டில் ஒரு ஆண்டுக்கு 4 டன் மீன்களை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

Next Story