சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 2 Jun 2018 12:55 PM GMT (Updated: 2018-06-02T18:48:31+05:30)

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது.

சென்னை,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அமைச்சரவை கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை வெளியிடும் வரை சட்டப்பேரவை கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்று அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து கடந்த 30ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாதிரி சட்டசபை கூட்டத்தினை தி.மு.க. நடத்தியது.  இதில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். தி.மு.க. சட்டசபை கொறடா சக்ரபாணி இந்த மாதிரி சட்டசபைக்கான சபாநாயகராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டத்தில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு  இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று தொடங்கியது.  இந்த கூட்டத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சட்டப்பேரவை கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்பதா? அல்லது வேண்டாமா? என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

Next Story