அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு


அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதிப்பதாக ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 3 Jun 2018 4:18 AM IST (Updated: 3 Jun 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் தனியார் உணவகங்கள் அமைக்க அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு டெண்டரை அனுமதிப்பதாக தொடர்ந்த வழக்கில் ரெயில்வே நிர்வாகம் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஈரோட்டைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது. நாடு முழுவதும் 24 ரெயில் நிலையங்களில் பயணிகளின் தேவைக்காக 9 ஆண்டுகளுக்கு ‘புட் பிளாசா’ எனப்படும் உணவகங்கள் அமைக்க ரெயில்வே நிர்வாகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலும் உணவகம் அமைக்க டெண்டர் கோரப்பட்டது.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் உணவகம் அமைக்க நான், டெண்டர் விண்ணப்பம் கொடுத்தேன். உணவகம் அமைக்க ஒரு ஆண்டுக்கு 5 கோடியே 28 லட்சம் ரூபாய் தர உத்தரவாதம் அளித்து இருந்தேன். ஆனால், ரெயில்வே அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு 3 கோடியே 51 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கேட்டவருக்கு உணவகம் வைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளனர்.

எனது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து விட்டனர். ரெயில்வே அதிகாரிகளின் முறைகேட்டால் ரெயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1¾ கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே, வெளிப்படையாக டெண்டர் நடத்தி உணவகங்களை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பாஸ்கரன், இதுதொடர்பாக வருகிற 12-ந்தேதிக்குள் ரெயில்வே நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தனியார் உணவகம் அமைப்பதற்கான டெண்டரை இறுதி செய்ய இடைக்கால தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.

Next Story