துப்பாக்கி சூடு சம்பவம்; உயிரிழந்த 7வது நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


துப்பாக்கி சூடு சம்பவம்; உயிரிழந்த 7வது நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 3 Jun 2018 6:04 AM GMT (Updated: 3 Jun 2018 6:04 AM GMT)

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 7வது நபரின் உடல் மறு பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் கடந்த 22ந்தேதி 100வது நாளை எட்டியது.  இதில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது கலவரமாக வெடித்தது.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.  இதில், செவிலியர் படிப்பு படித்து வந்த ஸ்னோலின் (வயது 17) என்பவரும் ஒருவர்.

இந்த சம்பவத்தில் பலியானவர்களில் 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கோர்ட்டு உத்தரவின்பேரில் அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டன.

இதற்கிடையே, சுட்டு கொல்லப்பட்டவர்களின் உடலை பொதுமக்கள் தரப்பிலான தனியார் மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதனை வீடியோ பதிவுசெய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் ஏற்கனவே பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரது உடல்களை தடயவியல் நிபுணர்கள் மற்றும் எய்ம்ஸ் அல்லது ஜிப்மர், திருவனந்தபுரம் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அடங்கிய குழு முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.

அதன்பிறகு அந்த உடல்களை அவர்களின் உறவினர்கள் கேட்கும் பட்சத்தில் ஒப்படைக்கலாம். பிரேத பரிசோதனையின் போது குண்டடிபட்ட இடங்களை கண்டிப்பாக புகைப்படம், வீடியோ மற்றும் எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர்.

இதனை தொடர்ந்து 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன.  இந்நிலையில், துப்பாக்கி சூட்டில் பலியான ஸ்னோலின் உடல் மறு பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

Next Story