கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து புகழாரம்


கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து புகழாரம்
x
தினத்தந்தி 3 Jun 2018 10:45 PM GMT (Updated: 2018-06-04T03:27:08+05:30)

தமிழுக்கு செம்மொழி பெருமை பெற்றுத்தந்தது கருணாநிதி மகுடத்தின் வைரம் என்று சென்னையில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் கருத்தரங்கில் கவிஞர் வைரமுத்து பேசினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ‘கலைஞர்-95’ என்ற தலைப்பில் நேற்று மாலை கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கத்துக்கு இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., எஸ்.ஜோயல் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில், ‘தமிழ் உலகில் கலைஞர்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது. கருணாநிதி, தமிழருக்கும், தமிழுக்கும் செய்த தொண்டு ஒரு நூற்றாண்டை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சற்று நேரத்துக்கு முன்னால் ஒரு செய்தி படித்தேன். இந்தியாவில் கூகுளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொழி இந்தி என்று இதுவரை இருந்தது. 39 சதவீதம் கூகுளில் இந்தி இருந்தது. இன்று தமிழ் அதை வென்றுவிட்டது. இன்றைக்கு தமிழின் பயன்பாடு கூகுளில் 42 சதவீதம் என்று உயர்ந்திருக்கிறது.

பெரும்பான்மை மக்களால் பேசப்படுகின்ற இந்தி மொழியை ஒரு மாநில மொழியாகிய தமிழ் தாண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் மூலகாரணம், திராவிட இயக்கம் கடந்த அரை நூற்றாண்டாக ஆற்றி வந்த தமிழ்த்தொண்டுதான். கருணாநிதியின் எழுத்துக்கும், பேச்சுக்கும், தொண்டுக்கும் கிடைத்த பிறந்தநாள் பரிசு இது என்று கொண்டாடலாம்.

சுயமரியாதை, பகுத்தறிவு என்ற அடிப்படை லட்சியங்களை உயர்த்தி பிடிக்கவே கருணாநிதியின் அறிவு பயன்பட்டது. திருக்குறளுக்கு உரை எழுதிய போது கூட பகுத்தறிவை முன்னிலைப்படுத்தினார், கருணாநிதி. ‘ஒருமைக்கண் தாம்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து’, என்பது குறள். ‘ஒரு பிறவியில் ஒருவன் பெற்ற கல்வி, ஏழு பிறவிக்கும் பாதுகாப்பாக அமையும்’ என்று தான் எல்லா உரையாசிரியர்களும் எழுதினார்கள்.

ஆனால் பிறவியின் மீது நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாதியான கருணாநிதி புது உரை எழுதினார். ஒருமுறை ஒருவன் பெறும் கல்வியானது அவனது ஏழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்று எழுதி பகுத்தறிவை உயர்த்தி பிடித்தார். சமஸ்கிருதம் இல்லாமல் திராவிட மொழிகள் இயங்க முடியாது என்ற கருத்து வடநாட்டு அறிவுலகத்தால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் திரைப்பட வசனத்தில் கூட தனித்தமிழில் எழுதமுடியும் என்று எழுதிக்காட்டினார் கருணாநிதி.

‘பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து... கண்ணே முத்தே தமிழ் பெண்ணே... என்றெல்லாம் குலவி கொஞ்சி தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தன தொட்டிலிலே வீரனே என் விழி நிறைந்தவனே தீரர் வழி வந்தவனே... என்றெல்லாம் குலவி கொஞ்சி யாரை சீராட்டினீர்களோ, அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாடவேண்டும் என்னும் தணியாத ஆசைக்கு பெயர் கட்டளையா... தந்தையே’, என்பது மனோகராவில் அவர் எழுதிய மாணிக்கத்தமிழ்.

இதில் சந்தனம்-சந்தோஷம்- சபை என்ற மூன்று சொற்கள் மட்டும்தான் வடசொல். மற்றவை முழுக்க தமிழ். கருணாநிதிக்கு எத்தனையோ பெருமைகள் உண்டு. ஆனால் தமிழுக்கு செம்மொழி பெருமை பெற்று தந்ததே அவரது மகுடத்தின் வைரம். அவர் நூறாண்டு கடந்து வாழ்க என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், ‘இந்திய அரசியலில் கலைஞர்’ எனும் தலைப்பில் பேராசிரியர் அப்துல் காதர் பேசியதாவது: இன்றைக்கு ஆயிரம் நட்சத்திரங்கள் அணிவகுத்து கோட்டையை பிடிக்க வருகின்றன. ஆயிரம் நட்சத்திரங்கள் அணிவகுத்தாலும் உதயசூரியனால் தான் கோட்டையை பிடிக்க முடியும். அந்த சரித்திரம் எழுதப்பட தயாராக இருக்கிறது. அதற்கான பேனா கருணாநிதி கையில் இருக்கிறது. எழுதும் மையாக உண்மையான தி.மு.க.வினர் உள்ளனர். தி.மு.க.வில் எத்தனையோ அணி இருந்தாலும் கருணாநிதி அணி என்றால் அது இளைஞர் அணி தான்.

வானம் இல்லாத இடமே இங்கில்லை. எல்லோரையும் தலைநிமிர வைக்கும் வானம் தான் எங்கள் தலைவர் கருணாநிதி. 80 ஆண்டுகள் இடைவிடா கட்சி பணியில் ஈடுபட்டிருக்கும் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி. தமிழர் இனமான எழுச்சி பணியில் அவர் ஒப்பிட முடியாதவர். அவர் இப்போது எழுந்து நடக்க முடியாவிட்டாலும், சக்கர நாற்காலியிலும் தன் இடைவிடா பணியை தொடருகிறார். இந்திய அரசியலில் கருணாநிதி பதித்துள்ள ஆழமான அடித்தளம், தமிழரின் பெருமை தான். இத்தகைய ஒப்பற்ற தலைவரின் பிறந்தநாளை கொண்டாடுவதே நமக்கு பெருமை தான். இவ்வாறு அவர் பேசினார்.

‘தலைமை பண்பில் கலைஞர்’ எனும் தலைப்பில் பழ. கருப்பையா பேசியதாவது. ஒரு மனிதனுக்கு 95 வயது என்பது ஆச்சரியமானது. கருணாநிதியின் பல்வேறு பரிணாமங்கள் நம்மை வியக்கவைக்கும். பெரியார், அண்ணாவுக்கு பிறகு நீண்ட காலம் தி.மு.க.வை கட்டிக்காத்து வருகிறார். கருணாநிதியை நினைவுகூருவதற்கு அவர் செய்த காரியங்கள் ஏராளமோ, ஏராளம். தமிழகத்தில் நாம் வாழும் காலத்தில் வாழும் மிகப்பெரிய தமிழ் இன தலைவர் கருணாநிதிதான். எல்லா திறமைகளும் ஒருசேர வாய்ந்த அரும்பெரும் தலைவர் கருணாநிதி. இயற்கையிலேயே தமிழருக்கென வாய்த்த மிகப்பெரிய தலைவர்.

போராட்டம் போராட்டம் என்றால் நாடே சுடுகாடு என்று சிலர் பேசுகிறார்கள். ஆனால் இன்றைக்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டதால்தான் தமிழரின் பெருமை காக்கப்பட்டு வருகிறது என்பதை அவர்கள் மறந்து பேசுகிறார்கள். தொண்டர்கள் மத்தியில் பாசமாகவும், அன்பாகவும் பேசுவதில் காமராஜரும், கருணாநிதியும் ஒன்று. ஒரு தலைமைப்பண்புக்கு அடையாளமே கருணாநிதி தான். இவ்வாறு அவர் பேசினார்.

‘கலையுலகில் கலைஞர்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார். முன்னதாக ‘செம்மொழி கவிஞர்’ என்ற தலைப்பில் கல்பாக்கம் ரேவதி குழுவினரின் இசையரங்கம் நடந்தது.

Next Story